உலகம்

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல் ; கிரிமியா பாலத்தின் ஒரு பகுதி கடலுக்குள் சரிவு

ரஷ்யாவையும் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் முக்கியப் போக்குவரத்துப் பாதையான கெர்ச் பாலத்தின் (Kerch Bridge / Crimean Bridge) ஒரு பகுதி, உக்ரைன் படைகள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இடிந்து கடலுக்குள் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலடியாக, உக்ரைன் தலைநகர் கீவில் (Kyiv), டினிப்ரோ (Dnipro) ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இரண்டு முக்கியப் பால்கள் மீது ரஷ்யப் படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல வாரங்களாகத் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல், இதுவரை இல்லாத அளவிலான நடவடிக்கை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல் ; கிரிமியா பாலத்தின் ஒரு பகுதி கடலுக்குள் சரிவு | Crimea Bridge Collapses Into Sea Ukrainian Attack

 

உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள காணொளிகளில், கிரிமியா பாலத்தின் வளைவுப் பகுதியும் (Arch Section), சாலைப் பாலத்தின் ஒரு பகுதியும் இடிந்து கடலுக்குள் விழுந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கிரிமியா ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திங்கட்கிழமை இரவு ரஷ்யப் படைகள் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில், கீவ் நகரின் மேற்குப் மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கும் வடக்குப் பாலம் (Northern Bridge), தெற்குப் பாலம் (Southern Bridge) ஆகிய இரண்டு முக்கியப் பால்களும் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) தகவல் வெளியிட்டுள்ளார். தாக்குதல்களின் விளைவாக நகரின் சில பகுதிகளில் குடிநீர் மற்றும் வெப்ப விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யப் படைகளுக்கான ஆயுதங்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் முக்கியத் தரைவழிப் பாதையாக விளங்கிய கிரிமியா பாலம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், அதன் ஊடான போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலத்தை மீண்டும் கட்டியெழுப்பப் போவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் ரஷ்யா–உக்ரைன் போரில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *