முல்லைத்தீவு கடலினுள் புகுந்து ஒரு கோடி ரூபா வலைகளை அறுத்தெறிந்த இந்திய ‘ட்ரோலர்’

முல்லைத்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப்படகுகள் கடற்தொழிலாளர்களின் ஒருகோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்துள்ளதுடன் அந்தப் பகுதியில் கடற்படையைக் கண்டதும் தப்பியோடியுள்ளதாக உள்ளூர் கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் (ட்ரோலர்) படகு ஒன்று, நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு உள்ளூர் கடற்தொழிலாளர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து நாசப்படுத்தியுள்ளதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, இலங்கை கடற்படையினர் வருவதைக் கண்ட இந்திய இழுவைமடிப் படகுகள், தமது வலைகளை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த இந்தியப் படகினால் அறுத்து விடப்பட்ட வலைகளின் ஒரு பகுதியை முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் கடலில் இருந்து கரைக்கு எடுத்துவந்துள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைமடி படகுகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக கடற்தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், கடற்படையினர் இவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.இனிவரும் காலம் முல்லைத்தீவு கடலில் இறால் படும் காலம் இதனால் இந்திய இழுவைமடி படகுகள் எங்கள் கடலில் உள்ள அனைத்து வளங்களையும் சூறையாடிச் செல்கின்றார்கள்.
இந்த நிலையில் இந்திய இழுவைப்படகால் அறுத்துவிடப்பட்ட வலைகளின் பெறுமதி இலங்கை ரூபாயில் ஒருகோடி ரூபா என கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
![]()