பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு; இன்று முதல் பாரிய போராட்டங்கள்!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச துறை தொழிற்சங்கங்கள் பல தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு அரச துறையினர் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் தமக்கு கிடைக்கவில்லை என்றும், இதனை தங்களுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியே இவ்வாறு தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க அந்த சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
அந்த வகையில் அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், இன்று முதல் அந்தப் போராட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, நீர்ப்பாசனத் தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கம், அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவைகள் அதிகாரிகள் சங்கம், அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களும் இன்று முதல் நாடாளவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன.
தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடரப் போவதாக அந்த சங்கங்கள் அறிவித்துள்ளன.
அத்துடன் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் தமக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. குறித்த கோரிக்கைகளுக்குப் பதில் கிடைக்காத பட்சத்தில், எதிர்காலத்தில் தமது சங்கம் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் என அதன் தலைவர் சுமித் கொடிகார குறிப்பிட்டுள்ளார்.
![]()