இலங்கை

டிசம்பர் முதலாம் திகதி முதல் யாழில் இ.போ.ச. பஸ்களும் புதிய இடத்திலிருந்து சேவை

நூறு கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணம் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே தமது சேவைகளை ஆரம்பிக்க வேண்டுமென இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பேருந்து நிலையச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அவசர ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (13) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர்,

சபையின் நடைமுறைகளின்படி 100 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட தூரமே நெடுந்தூரப் பேருந்துச் சேவையாகக் கருதப்படுவதாகத் தெளிவுபடுத்தினார். புதிய பேருந்து நிலையம் இந்தத் தூர வரையறையின் அடிப்படையிலா அல்லது வெளி மாவட்டங்களுக்கான பேருந்துச் சேவைகளைக் கருத்திற் கொண்டா அமைக்கப்பட்டது? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த பேருந்து நிலையம் வெளிமாவட்டங்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதனையடுத்து நூறு கிலோ மீற்றருக்கு மேற்பட்ட தூர சேவைகளில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அனைத்துப் பேருந்துகளும் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் மற்றும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் சாலைகளின் முகாமையாளர்கள் உள்ளிட்டோர் இதற்கு இணக்கம் தெரிவித்தனர். நூறு கிலோ மீற்றருக்குக் குறைவான உள்ளூர் சேவைகள் தற்போதைய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகள் ஒரே நேரத்தில் புறப்படுவதால் ஏற்படும் நேர மோதல்கள் மற்றும் பயணிகளுக்கான சிரமங்களைத் தவிர்ப்பதற்காக நேர அட்டவணையை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குளிரூட்டப்பட்ட பேருந்துகளும் இந்த இணைந்த நேர அட்டவணைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அலுவலர்களுக்கான சேவைப் பேருந்துகளையும் உரிய ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக இந்த விகிதாசாரக் கட்டமைப்புக்குள் உள்ளடக்குவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது.

இணைந்த நேர அட்டவணையில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அதனை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் இறுதிப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நவம்பர்- 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு அறிவித்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் இணைந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் , யாழ்.மாநகர சபையின் முதல்வர் திருமதி.மதிவதனி விவேகானந்தராசா, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியப் பிரதான முகாமையாளர் கந்தசாமி கேதீசன், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித்த செனவிரத்ன, யாழ்.மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், யாழ்.மாநகர சபை ஆணையாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம், காரைநகர் மற்றும் பருத்தித்துறை சாலைகளின் முகாமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *