இலங்கை

கம்பவாரிதியின் கருத்துகள் ஏற்படுத்திய சர்ச்சை! மௌனம் காக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள்..

ஆன்மீகச் சொற்பொழிவாளர் கம்பவாரிதி ஜெயராஜ் முன்வைத்துள்ள கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அவற்றுக்கு உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம் எனவும், அவ்வாறு சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தமிழ் இளைஞர்களுக்குச் சட்ட ரீதியான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் சட்டத்தரணி கே.வி தவராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,

கம்பவாரிதி ஜெயராஜ் தனது கருத்துகளை முன்வைக்கும்போது, விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் தாம் கொண்டிருந்த தொடர்புகள் மற்றும் அவர்களிடமிருந்து பெற்ற அங்கீகாரங்கள் குறித்துக் குறிப்பிட்டதாகச் சுட்டிக்காட்டிய கே.வி தவராசா , அவருடைய கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகளை முன்வைப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பதிலளிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றார்.

குறிப்பாக, இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தடை செய்யப்பட்ட இயக்கம் குறித்த தகவல்களைத் தெரிந்தும் மௌனமாக இருப்பதோ அல்லது அது தொடர்பாகக் கருத்துகளைப் பதிவிடுவதோ ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பாரிய அபராதங்களுக்கு (7 மில்லியன் ரூபா வரை) வழிவகுக்கலாம்.

தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தும் அவற்றை வழங்கத் தவறுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது மற்றும் நீண்டகாலத் தடுப்புக் காவல் போன்ற சட்ட நடவடிக்கைகள் இடம்பெறக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், புதிய சட்ட ஏற்பாடுகளின் கீழ் அபராதங்களும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் எதிர்கொண்ட சட்ட நெருக்கடிகளையும் அவர் நினைவுபடுத்தினார்.

குறிப்பாக, ஊடகவியலாளர் ஜெயபிரகாஷ் திசைநாயகம் தொடர்பான வழக்கு, சுடரொளி மற்றும் உதயன் பத்திரிகைகளுடன் தொடர்புடைய சம்பவங்கள் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் செயற்பாடுகள் தொடர்பில் நிலவிய அச்சுறுத்தல்களை எடுத்துரைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *