கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய என்விடியா CEO ; சீனாவுக்கு சிப்கள் விநியோகித்ததாகப் பெண் மீது குற்றச்சாட்டு

சீனப் பெண் தொழிலதிபர் ஒருவருடனான திருமணத்திற்குப் புறம்பான உறவு மற்றும் சிப்கள் விநியோகம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன உளவாளி என அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளால் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண், என்விடியாவின் குறைந்தது 7.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சிப்களைச் சீன நிறுவனங்களுக்குக் கொண்டுசெல்ல உதவியதாகப் புதிய அறிக்கையொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
‘தி இன்ஃபர்மேஷன்’ (The Information) இதழ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, ஆலிஸ் ஹுவாங்கை அறிந்த இருவரை மேற்கோள்காட்டியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, ஆலிஸ் ஹுவாங் தனது கணவர் மற்றும் சகோதரியுடன் இணைந்து, என்விடியா சிப்களைப் பெற்றுக்கொள்வதற்காக சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல நிறுவனங்களை உள்ளடக்கிய வலையமைப்பை உருவாக்கியுள்ளார்.
இந்த வலையமைப்பின் முக்கிய நிறுவனமாக ஷாங்காய் செஞ்சுரி லிடாங் (Shanghai Century Lituang) குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், அதே ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் என்விடியாவின் விருப்பமான கிளவுட் கூட்டாளர் அந்தஸ்தைப் பெற்றதாகவும், இதன் மூலம் நிறுவனத்தின் சிப்களைப் பெறுவதற்கு முன்னுரிமை கிடைத்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட என்விடியா சிப்களுக்கான விநியோகங்கள் தடைப்பட்ட சந்தர்ப்பங்களில், ஆலிஸ் ஹுவாங் என்விடியா மற்றும் அதன் விநியோகஸ்தர்களுடனான தொடர்புகளைப் பயன்படுத்தி சிப்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் சுமார் 240,000 H100, H200 மற்றும் A100 ரக சிப்களைச் சீனாவுக்குக் கொண்டுசெல்ல அவர் உதவியதாகவும் ‘தி இன்ஃபர்மேஷன்’ அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையில், ஆலிஸ் ஹுவாங்குடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்ததாக ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அவர் சீன உளவாளி என்ற குற்றச்சாட்டு இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், தி நியூயோர்க் டைம்ஸ் மற்றும் ஃபைனான்சியல் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும் முன்னதாகச் செய்திகளை வெளியிட்டிருந்தன.
மேலும், ஜென்சன் ஹுவாங் சுதந்திரமான விசாரணைக்கு ஒத்துழைக்க உறுதியளித்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் என்விடியா நிறுவனம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறி மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சிப்கள் சீனாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், என்விடியா நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் தொழில்நுட்பப் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
![]()