இலங்கை

பலாங்கொட கஸ்ஸப தேரர் விவகாரம் : மனநலப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

அநுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் உள்ள தானசாலைப் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மூன்று பிரஜைகளின் மனநல நிலைமையைச் பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் போதைப்பொருள் ஏதேனும் பயன்படுத்தியுள்ளனரா என்பது குறித்து ஆராய்வதற்காக மருத்துவப் பரிசோதனை ஒன்றினை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளது.

ருவன்வெலிசாயவுக்கு அருகில் உள்ள தானசாலைப் பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தின் போது பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகளையும் ஏனைய மூவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார்.

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர், சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ருவன்வெலிசாயவுக்கு அருகிலுள்ள தானசாலைப் பகுதிக்கு, பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜங்கனை சத்தாரதன உள்ளிட்ட குழுவினர் வருகை தந்ததையடுத்தே குறித்த பகுதியில் நேற்றுமுன்தினம் அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்போது இரு தரப்பினரிடையே மோதல் ஒன்று வெடித்ததுடன், அந்த மோதலின் போது ராஜங்கனை சத்தாரதனவின் தலையில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட கஸ்ஸப தேரரும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதற்கமைய, சந்தேகநபர்கள் சிகிச்சை பெற்று வந்த அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று (12) இரவில் சென்ற அநுராதபுரம் பிரதான நீதவான் மேற்கொண்ட அவதானிப்புக்குப் பின்னர், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *