உலகம்

ஷவர்மா உணவில் இறைச்சியின் அளவு தொடர்பில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது

கனடாவின் லஷீன் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில், ஷவர்மா தட்டில் பரிமாறப்பட்ட இறைச்சியின் அளவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ள நிலையில், மொன்றியல் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

லெபனான் உணவுகளை வழங்கும் ‘அமீர்’ உணவகத்தின் முகாமையாளரான வஜிஹ் குர்தி தெரிவிக்கையில், பெண் ஒருவர் கலவை ஷவர்மா தட்டு ஒன்றை வாங்கிச் சென்ற சுமார் 30 நிமிடங்களின் பின்னர், அவரது கணவர் உணவகத்திற்குள் வந்து, உணவில் போதியளவு இறைச்சி இல்லை எனக் கூறி முறைப்பாடு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

“கோழி மற்றும் மாட்டிறைச்சியின் விலை எனக்குத் தெரியாது என நினைத்தீர்களா? என்னை முட்டாள் என நினைக்கிறீர்களா?” என அந்த நபர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷவர்மா உணவில் இறைச்சியின் அளவு தொடர்பில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது | Dispute Over Shawarma Portion Turns Violent

வாடிக்கையாளர் செலுத்திய பணத்திற்கான அளவு வழங்கப்பட்டுள்ளதாக முகாமையாளர் விளக்கமளித்ததுடன், முழுப் பணத்தையும் திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த உணவில் சோறு, உருளைக்கிழங்கு மற்றும் சாலட் ஆகியவற்றுடன் கோழி மற்றும் மாட்டிறைச்சி பரிமாறப்படும்.

ஆனால், அந்த நபர் தட்டு முழுவதும் இறைச்சி மற்றும் உருளைக்கிழங்கு மாத்திரமே நிரப்பப்பட வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். மேலதிக இறைச்சிக்குத் தனிக் கட்டணம் அறவிடப்படும் என முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, அந்த நபர் உணவகத்தின் கவுண்டருக்கு மேலாகப் பாய்ந்து முகாமையாளரின் முகத்திலும் உடலிலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

அத்துடன், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஹிஜாப் அணிந்திருந்த முகாமையாளரின் மனைவியையும் நோக்கி, “நீங்கள் உங்கள் நாட்டிற்கே திரும்பிச் செல்ல வேண்டும்” என இனவாத ரீதியான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னரும் வாடிக்கையாளர் ஒருவர் தமது ஊழியர் மீது எச்சில் துப்பிய சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட வஜிஹ் குர்தி, ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் எனவும், தன்னைத் தாக்கிய நபருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், மொன்றியல் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *