இந்தியா

இந்தியாவில் மீண்டும் போராட்டம்: களமிறங்குகிறார் ராகுல் காந்தி

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள கிக் தொழிலாளர்களின் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் பணியாற்றும் சுமார் ஆறு இலட்சம் கிக் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதன் கீழான நலத்திட்டங்களை அறிவிக்கும் நிகழ்விலும் ராகுல் காந்தி கலந்துகொள்ளவுள்ளார்.

இது தொடர்பில் தெலங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விவேக் வெங்கடசுவாமி தெரிவிக்கையில், கிக் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர்களின் நலனுக்கான சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின்போது கிக் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தார். அதற்கமைய, அவர்களின் எதிர்கால நலன்களைக் கருத்திற்கொண்டு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிக் தொழிலாளர்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக விசேட கைப்பேசி செயலி ஒன்றையும் மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஷில்பா கலா வேதிகா மண்டபத்திலிருந்து ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையம் (HICC) வரை இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. இதில் கிக் தொழிலாளர்கள் அதிகளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விநியோகப் பணியாளர்கள், வாடகை வாகன சாரதிகள் உள்ளிட்ட செயலி அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு, விபத்துக் காப்புறுதி, சுகாதார நலன்கள் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் இந்த நிகழ்வில் முக்கியத்துவம் பெறவுள்ளன.

இந்தப் பேரணி அரசியல் சார்பற்ற முறையில் தொழிலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் கிக் தொழிலாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *