ஜனாதிபதியின் இன்றைய அறிவிப்பு பொதுமக்களுக்கு திருப்தியை ஏற்படுத்துமா..!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, முதலீடுகளை இலக்காகக் கொண்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட கடுமையான பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள், காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இதில் சில நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைய வாரங்களில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியதற்கு அமைய, தனிநபர் வருமான வரி (PAYE) விலக்கு எல்லை மீண்டும் உயர்த்தப்படுவதுடன், புதிய வரிகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.
நிவாரணங்கள்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 345 மில்லியன் டொலர் அடுத்த தவணைக் கடனுக்கான நிபந்தனைகள் மற்றும் எல் நினோ (El Niño), மத்திய கிழக்குப் போர் போன்ற சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கு முன்னறிவிக்கப்பட்ட நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் மூன்றாவது வரவு – செலவுத் திட்டமான இதில், சேவைச் செலவினங்களுக்காக 4.99 ரில்லியன் ரூபாயும், நிகர கடன் எல்லையாக 3.8 ரில்லியன் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான நிவாரணங்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 150,000 ரூபாயாக உயர்த்தப்பட்ட தனிநபர் வருமான வரி (PAYE) விலக்கு எல்லை மீண்டும் மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க மாநாடொன்றில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் பெறுமதி சேர் வரியை (VAT) படிப்படியாகக் குறைப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான சொத்து வரியை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
வரி விகிதங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, வரி செலுத்துவதை முறைப்படுத்துவதன் மூலமே வருமானத்தை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அரச வருமான திரட்டல் இலக்குகளை விடவும் சிறப்பாக முன்னேறி வருகின்றது.
2030ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15.4 சதவீதமாக அரச வருமானத்தை உயர்த்துவதே ஆரம்ப இலக்காக இருந்தபோதிலும், 2025ஆம் ஆண்டின் இறுதியிலேயே அது 16 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

பொது நிதி முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் இவ்வருடத்திற்கான வருமான இலக்கு சுமார் 15 சதவீதமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை இலகுவாக அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வருமான மட்டம் உறுதிப்படுத்தப்பட்டதும், நாட்டிற்குத் தேவையான பொது முதலீடுகளுக்கு நிதியளிக்கவும், தற்போதைய வரி கட்டமைப்பை மாற்றியமைப்பது குறித்து ஆராயவும் வாய்ப்பு ஏற்படும். நிறுவன வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரிகளில் உள்ள சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், வருமான திரட்டல் தாமதமாகும் என்பதால் தற்போதைய கட்டத்தில் வரி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்பில்லை.
எனினும், வருமானம் தேவையான மட்டத்தை எட்டியதும் மறைமுக வரிகளைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும் எனவும், அனைத்து வரிக் கொள்கை மாற்றங்களும் நியாயம், எளிமை மற்றும் வசதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()