கண்களில் நீர் வடிந்ததேன்?…. கதை… சங்கர சுப்பிரமணியன்


நொந்துபோய் நிறமிழந்த சட்டையின் தோள்பட்டையில் சட்டை கையின் மேற்புறத்தில் கிழிந்திருந்ததை மறைக்க அம்மா ஊசி நூல் கொண்டு தைத்த சட்டை உடலை மூடியிருந்த போதும் குளிருக்கு அதனால் ஈடு கொடுக்க முடியவில்லை. அம்மா தோட்ட வேலை செய்து சேமித்து வைத்திருந்த பணத்தில் ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்திருந்தாள்.
கைச்செலவுக்கென கொடுத்த இருபத்தைந்து ரூபாய் தவிர மீதமிருந்த பணத்தில் எடுத்துக் கொடுத்த நான்கு முழ வேட்டி மொடமொடவென உடம்பில் ஒட்டியும் ஒட்டாமலும் கனமாக இருந்தது. அதில் கஞ்சி போட்டிருப்பார்களோ என்னவோ தொடையில் மொரமொர என்று உராசியது. அதிலும் ஒரு நன்மை என்னவென்றால் அந்த வேட்டியைத் தாண்டி குளிர் என்னை இடுப்புக்கு கீழ் தாக்கவில்லை.
வேட்டிக்கும் சட்டைக்கும் தொடர்பே இல்லை. எனக்கும் வாழ்க்கைக்குமே தொடர்பில்லாத போது வேட்டி சட்டையை எண்ணி விசனப்பட முடியுமா? பள்ளி இறுதிப் படிப்பை முடித்த கையோடு வேலை ஏதும் கிடைக்காமல் ஒரு உணவகத்தில் டேபிள் துடைத்து தண்ணீர் வைக்கும் வேலை பார்த்தேன். என் அப்பாவுடன் பிறந்த பெரியப்பா குடும்பம் ஒன்று பெங்களூரில் வசதியாக வாழ்வதாக பெற்றோர் சொல்லி அறிவேன்.
எனது பதினொன்றாம் வயதில் என் அப்பா இறந்து போனதையறிந்த எனது பெரியப்பா மகனான சேகர் அண்ணா வந்து துக்கம் விசாரித்து சென்றார். மற்றபடி இரு குடும்பத்துக்கும் இடையில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பேச்சு வார்த்தை கிடையாது? என்ன காரணமோ எனக்குத் தெரியாது. அது பற்றி என் பெற்றோரும் என்னிடம் எதுவும் சொன்னதில்லை.
இந்த சமயத்தில்தான் ஒரு நாள் என் அம்மா,
“மணிவாசகம். அப்பாவும் இறந்து ஆதரவற்ற இந்நிலையில் சேகர் அண்ணாவிடம் உதவி கேட்டால் என்ன?”
“என்னம்மா சொல்ற. இத்தனை ஆண்டுகள்வரை பாராமுகமாக இருந்துட்டு இப்ப நெருக்கடி என்ற ஒன்று வந்ததும் மானங் கெட்டு உதவி கேட்கணுமா? அதைவிட செத்துப் போயிடலாம் அம்மா”
“ செத்துப் போயிடலாம்தான். ஆனா சஞ்சலமற்று தூங்கிக் கொண்டிருக்கும் அவளை யாரிடம் விட்டுச் செல்வது?” என்று மலர்களைப்போல் உறங்கிக் கொண்டிருக்கும் தங்கை யாழினியைக் காட்டினாள் தாய்.
அம்மா அப்படிக் கேட்டதும் என்ன செய்வதென்று எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.
அப்பா செத்த துக்கம் கேட்க வந்தபோது உன் அண்ணா சித்தி உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் எனக்கு எழுதுங்க என்று சொல்லி இந்த விலாசத்தை தந்துட்டு போனான். அவனுக்கு ஒரு கடிதம் போடு என்று அம்மா ஒரு துண்டுச் சீட்டைத் தந்தாள்.
என் பெரியப்பா குடும்பத்துக்கு ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத நாங்கள் இப்போது மட்டும் உதவியென்று கையேந்துவது எனக்கு அவமானமாக இருந்தது. இருந்தாலும் கையில் காசில்லதவன் அவமானத்தை எல்லாம் நினைத்து கவலைப் படலாமா? பொருளற்றார்க்கு இவ்வுலகில்லை என்பதை உணர்ந்து ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்க என்று அண்ணா அம்மாவிடம் சொல்லிச் சென்றதால் அண்ணாவுக்கு கடிதம் எழுதினேன்.
சில மாதங்கள் ஆகியும் அண்ணாவிடம் இருந்து பதில் வரவில்லை. நான் கடிதத்தில் எனது வேலைபற்றியும் உணவகம் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஒரு நாள் திடீரென நான் வேலை பார்த்த உணவகத்துக்கே வந்து விட்டார். நான் மேஜையைத் துடைக்கும் பொருட்களுடன் கையில் ஒரு சிறு பிளாஸ்டிக் முறத்துடன் அரைக்கால் சட்டை மேல்சட்டையுடன் இருந்த கோலத்தைக் கண்டார். என்ன நினைத்தாரோ,
“மணிவாசகம் இரவு வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்” என்று சொன்னார்.
“சரி, அண்ணா” என்றதும் கவலை தோய்ந்த முகத்துடன் சென்றார்.
இரவில் அண்ணா சொன்னபடி வந்தார். எனது மாமனார் வீட்டுக்கு வந்தேன். நேரில் வந்து பேசிக் கொள்ளலாம் என்று நான் போட்ட கடிதத்துக்கு பதில் போடாததற்கு காரணத்தை சொன்னார். இன்னும் ஒரு மாதத்தில் என்னை பெங்களூருக்கு அனுப்பி வைக்கும்படி அம்மாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார். இதெல்லாம் கனவில் நடந்து முடிந்தது போல் இருந்தது.
காலில் செருப்பு கூட இல்லாமல் பெங்களூர் கண்டோன்ட்மன்ட் ரயில் நிலையத்தில் நின்றிருந்தேன். மேல்சட்டைப் பையில் அம்மா கொடுத்த பணத்தில் கொஞ்சம் செலவு செய்தது போக மீதிப் பணமிருந்தது. மஞ்சள் பை ஒன்றில் பள்ளி இறுதிப் படிப்பு முடித்ததற்கு உண்டான சான்றிதழும் மாற்றுத் துணியும் இருந்தது. பையை மடித்து இறுக்கமாகப் பற்றியிருந்தேன். அதில்தான் என் உயிரும் வாழ்வும் இருந்தது.
பெங்களூர் குளிரை என்னால் தாங்க முடியவில்லை. அதற்கு என் உடைதான் காரணம். குளிர் தாங்கமுடியாமல் உதடுகள் தந்தியடித்தன. கைகால்கள் நடுங்கின. அப்போது ஒருவர் என் அருகில் வந்து தம்பி உங்கள் பெயர் மணிவாசகமா என்று கேட்டார். நான் நின்றிருந்த மாறுபட்ட தோற்றமே என்னை அவருக்கு அடையாளம் காட்டியிருக்க வேண்டும். பெயரைக் கேட்டவரிடம்,
“ஆம். திருநெல்வேலியில் இருந்து வருகிறேன். நீங்கள் யார்? என் பெயரைச் சொல்கிறார்களே?”
“தம்பி மணிவாசகம். நானும் உன் அண்ணன்தான். என் பெயர் சங்கரலிங்கம் என்றார். அண்ணாவால் வரமுடியாதபடி வேலை வந்துவிட்டது. அதனால் உன்னைக் கூட்டிச் செல்ல வந்திருக்கிறேன்” என்றார்.

என் கண்களில் நீர் முட்டி நின்றது. அனாதை போல் இருந்த எனக்கு இரண்டு அண்ணா, அக்கா, பெரியம்மா மற்றும் அண்ணி என்று இத்தனைபேர்கள் இருப்பதை அன்று உணர்ந்தேன். உணர்ச்சி வசப்படாதே வா போகலாம் என்றவர் என்னை ரயில்வேஸ்டேஷனுக்கு வெளியே அழைத்துச் சென்றார். பின் ஒரு ஆட்டோவில் ஏறி வீடு சென்றோம்.
எத்தனையோ ஆண்டுகள் மளமளவென்று ஓடிச்சென்று விட்டன. என் அண்ணா என்னை மேற்கொண்டு பொறியியல் துறையில் படிக்க வைத்தார். என்னை பெற்ற மகன்போல் பார்த்துக் கொண்டார். பல ஆண்டுகளாக இரு குடும்பங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும் என்னை ஆதரித்து என்னை வாழ்வில் முன்னேற வைத்தார். அவர் செய்த உதவியால் இன்று நான் ஒரு எதிர்பாராத வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் என் அண்ணா என்னிடம் எந்த கைமாறும் எதிர்பார்க்கவில்லை. நன்றிக்கடன் என்ற செஞ்சோற்றுக் கடனுக்காக துரியோதனனைப் பற்றி நன்றாக தெரிந்தும் கர்ணன் துரியோதனோடு இருந்தான். ஆனால் நான் என் அண்ணனிடம் பட்ட கடனுக்காக ஒன்றும் செய்ய வாய்ப்பில்லாமல் போயிற்றே என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டயிருந்தது.
அண்ணா, அக்கா, பெரியம்மா மற்றும் அண்ணி எல்லாம் மறைந்து விட்டார்கள். என் அண்ணாவின் பிள்ளைகள்கூட என்னிடம் எந்த உதவியும் கேட்டதில்லை. அப்பா செய்த உதவியினால்தான் சித்தப்பா வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை அடைந்தார் என்று எண்ணி என்னை எந்த வகையிலும் பயன்படுத்த முன்வரவில்லை. உதவி கேட்கும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இப்படிப் பட்ட சூழலில் ஒரு நாள் வாட்ஸ்ஆப்பில் எனது அண்ணன் மகனிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அவன் செய்து வந்த தொழில் நொடிந்துபோய் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதாக எழுதியிருந்தான். அந்த இழப்பிலிருந்து மீண்டுவந்து நிரந்தரமாக ஒரு வருமானம் வரவேண்டும் என்றால் எனக்கு பண உதவி தேவைப்படுகிறது. தாங்கள் எனக்கு ஏதாவது பண உதவி செய்ய முடியுமா என்று கேட்டிருந்தான்.

நீங்கள் கொடுக்கும் பணத்தை நான் செய்யும் தொழிலில் மட்டுமே முதலீடு செய்வேன். பணத்தை கடனாக கொடுத்தாலும் அதைத் திருப்பிக் கொடுக்க எல்லாவிதத்திலும் முயற்சி எடுப்பேன் என்றும் எழுதியிருந்தான். என் அண்ணன் குடும்பத்துக்கு எந்த கைம்மாறும் செய்ய முடுயவில்லையே என்று நினைத்தவனுக்கு ஒரு வாய்ப்பு வந்திருப்பதால் என்ன உதவிவேண்டும் என்று கேட்டு அதைச் செய்தேன்.
ஒரு குக்கிராமத்தில் ஏழ்மையின் கொடுமையை முற்றாய் உணர்ந்ததோடு அல்லாமல் என்ன செய்யப் போகிறோம் என்று எதிர்காலமே இருண்டிருந்த நிலையை எண்ணிப் பார்த்தேன். அப்போது காலத்தாற் செய்த உதவியாக எனது அண்ணா என்னை அழைத்துவந்து ஒளிமயமான வாழ்வை அமைத்துக் கொடுத்ததை நினைத்தபோது கண்களில் திரண்டு நின்ற கண்ணீர் கன்னத்தின் வழியாக வழிந்து கொண்டிருந்தது.
![]()
