பலதும் பத்தும்

திருமணமான 4 நாட்களில் 18 லட்சம் மதிப்புள்ள நகையுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!

இந்தியாவின் அரியானா மாநிலம் யமுனாநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணுக்கும், பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே கடந்த அக்டோபர் 31 ஆம் திகதி அரியானாவில் உள்ள ஜகாத்ரி உரிமையியல் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்தவுடன் அந்தப் பெண் தனது கணவருடன் பிலாஸ்பூரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார். வீட்டில் புதிய மருமகள் காலடி வைத்த மகிழ்ச்சியில் அந்தக் குடும்பத்தினர் இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

திருமணம் நடந்து நான்கே நாட்களில், அதாவது நவம்பர் 4 ஆம் திகதியன்று அந்தப் புதுப்பெண் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமாகியுள்ளார். அவர் வீட்டை விட்டுத் தப்பியோடும்போது, வீட்டில் பீரோவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் 1 லட்சம் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றைத் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்துடன் அவர் தலைமறைவாகியுள்ளது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டில் புதுப்பெண்ணையும் காணவில்லை, விலைமதிப்பற்ற நகைகளும் பணமும் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்திலும் உறவினர்களின் வீடுகளிலும் தீவிரமாகத் தேடிப் பார்த்துள்ளனர்.

எங்கு தேடியும் எவ்விதத் தகவலும் கிடைக்காததைத் தொடர்ந்து, மாப்பிள்ளையின் சகோதரி பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பராடி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தலைமறைவான அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *