கூடாரங்களை உடனடியாக அகற்றுமாறு நீதிமன்று உத்தரவு; 5 பௌத்த தேரர்களுக்கும் அழைப்பாணை

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த தேரர்களை இம்மாதம் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் அறிவித்தல் விடுத்துள்ளார்.
அனுராதபுரம் புனித நகரத்தின் புதிய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அது தொடர்பான வர்த்தமானியை மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் இந்தச் சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டு வருகிறது.
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த தேரர்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த தற்காலிக தடையுத்தரவை நீக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னரே நீதவானால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தேரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள சட்டத்தரணிகள், இந்தச் சத்தியாக்கிரகம் ருவன்வெலிசாய பகுதியில் அல்லாது அன்னதான மண்டப நடைபெறுகிறது என்றும், இதனால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி பொலிஸார் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி தடையுத்தரவைப் பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், முறைப்பாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள அனுராதபுரம் தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்நாயக்க, குறித்த சத்தியாக்கிரகம் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுகிறது என்பது விசாரணைகளில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றம் முன்னர் வழங்கிய உத்தரவுக்கும் தேரர்கள் கீழ்ப்படியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவ்விடத்தில் அமைதியற்ற வகையில் நடந்து கொண்டு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியிருந்தமை சட்ட மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐவரையும் இம்மாதம் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் அறிவித்தல் விடுத்துள்ளார்.
முன்னர் பிறப்பிக்கப்பட்ட தற்காலிக தடையுத்தரவின் மூலம் தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கோ அல்லது ஏனைய சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்கக் கூடாது என்றும், ருவன்வெலிசாய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அகற்றுமாறும் பௌத்த தேரர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
![]()