சமூக செயற்பாட்டாளரின் வீட்டுக்கு விஷமிகள் தீவைப்பு; குண்டசாலையில் அதிகாலையில் சம்பவம்

முன்னாள் பொலிஸ் பரிசோதகரும் தற்போதைய சமூக ஊடகச் செயற்பாட்டாளருமான அஜித் தர்மபாலவுக்குச் சொந்தமான கண்டி, குண்டசாலை, சதுன் மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று அதிகாலை தீவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று (09) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இத்தீவைப்புச் சம்பவத்தின் போது, குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் உள்ளிருந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டின் முன்பகுதி மற்றும் வரவேற்பறைப் பகுதியின் மீது பெற்றோல் ஊற்றப்பட்டுத் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதிகாலை 3 மணியளவில் சந்தேகத்திற்குரிய இருவர் வீட்டை நோக்கி வருகை தந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதுடன், பெற்றோல் கொண்டுவரப் பயன்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கொள்கலன் ஒன்றும் வீட்டிற்கு அருகில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தீப்பரவலால் ஏற்பட்ட கடுமையான புகையைச் சுவாசித்தமையினால் மயக்கமடைந்த 34 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த ஏனைய ஐவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாத போதிலும், சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றிய அஜித் தர்மபால, கடந்த அரசாங்க காலத்தில் ஏற்பட்ட அரசியல் செல்வாக்கு மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக சேவைக்குச் சமூகமளிக்காமல் வெளிநாடு சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் சேையைக் கைவிட்டுச் சென்றவராகக் கருதப்பட்டு பொலிஸ் திணைக்களத்தினால் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த இரு தசாப்தங்களாக இங்கிலாந்தில் வசித்து வரும் அஜித் தர்மபால, சமூக ஊடகங்கள் ஊடாக அரசியல் மற்றும் பாதாள உலகக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
இத்தீவைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()