ருவன்வெலிசாய பகுதியில் சத்யாகிரகம் தொடர்கிறது!

அனுராதபுர புனித நகர திட்டத்துக்கு எதிராக ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்யாகிரக போராட்டம், நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நேற்று (7) காலையில் அனுராதபுர ருவன்வெலிசாய அருகில் இந்தச் சத்யாகிரகத்தை தொடங்கினர்.
அங்கு போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, நேற்று மதிய வேளையில் அப்பகுதியில் அமைதியற்ற சூழல் உருவானது.
காவல்துறை அங்கு சென்று கட்டுமான பணிகளைத் தடுக்க முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து அனுராதபுர தலைமையக பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் விபரங்களை சமர்ப்பித்ததை அடுத்து, அனுராதபுர நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதியிலிருந்து சத்யாகிரகத்தில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தக்கூடாது என்றும், அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் பிக்குகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அப் பகுதியிலிருந்து வெளியேறாமல் இரவையும் அங்கேயே கழித்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
அரசாங்கம் அனுராதபுர புனித நகர திட்டத்திற்கு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
![]()