உலகம்

இந்தியாவில் மது விருந்து கொடுத்து மைத்துனர்களைக் கொன்ற சாரதி: மனைவி உட்பட 7 பேர் படுகொலை

இந்தியாவின் பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியைச் சேர்ந்த வாடகைக் கார் சாரதி ஒருவர், குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி உள்ளிட்ட ஏழு பேரைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் இந்துசேகர் (52) என்ற வாடகைக் கார் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது மனைவி சுனிதா (40) மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறுகள் இடம்பெற்று வந்துள்ளன. சுனிதாவின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட உறவினர்கள் குடும்ப விவகாரங்களில் தலையிட்டதால் இந்துசேகர் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி சுனிதாவை ஆட்டுக்கல்லால் தாக்கிக் கொலை செய்த அவர், சடலத்தை நகருக்கு வெளியே வீசியுள்ளார்.

பின்னர், தனது மைத்துனர்களான சிவகுமார் (42), சங்கர் (36) ஆகியோருக்கு மது மற்றும் இறைச்சி விருந்து வழங்கி, உரலால் தாக்கிக் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவர்களது மனைவிகளான திவ்யா (36), நளினி (32), மாமியார் ரூபாவதி (65) மற்றும் ஏழு வயது சிறுவன் புனீத் ஆகியோரையும் கொலை செய்து, சடலங்களை சார்மாடி மற்றும் நந்தி மலைப் பகுதிகளில் வீசியுள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து காணாமல் போனதைத் தொடர்ந்து, நளினியின் தாயார் லட்சுமி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, காணாமல் போனவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இந்துசேகரைப் பிடித்து சுமார் 24 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நந்தி மலையில் இருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சடலங்களை மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன் கருவிகளின் உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார், ஆட்டுக்கல் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *