இலங்கை

சர்வதேச நீதியை வலியுறுத்தி செம்மணியில் 16 இல் பாரிய போராட்டம்

செம்மணி மனித என்புக்கூடுகள் குறித்து நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதுடன் சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல்-02 மணியளவில் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் குறித்து ஆராய்வதற்காகவும், அனைத்து உறவுகளையும் ஒருங்கிணைப்பதற்காகவும் எதிர்வரும்-07 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்- 11 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர்ச் சிவகுரு ஆதீன மண்டபத்தில் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் புதிய நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்துக்கான புதிய நிர்வாகத் தெரிவு நேற்று வியாழக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்பிரகாரம் யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவராக சிவபாதம் இளங்கோதையும், செயலாளராக கஜேந்திரகுமாரும், பொருளாளராக சத்திய விஜயபாமாவும், உப தலைவராக விக்னேஸ்வரியும், உப செயலாளராக சுதாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகத் தெரிவின் பின்னர் யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகத்தினர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்ட விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் புதிய நிர்வாகமானது யாழ்.மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக இடம்பெறும் அனைத்துப் போராட்டங்களையும் இனி முழுமையாக முன்னெடுத்துச் செயற்படும்

எனவே, விசேட கூட்டத்திலும் போராட்டத்திலும் அனைத்துச் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *