இலங்கை

போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்

ஈழத்தமிழர்களின் கடந்தகாலப் போராட்ட வரலாறு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து அண்மையில் மூத்த பட்டிமன்றப் பேச்சாளர் கம்பவாரிதி ஜெயராஜ் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் சமூகத்திற்குள் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

அவரது இந்த சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், தாயகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார, அரசியல் சவால்களைச் சுட்டிக்காட்டியும் ஊடகப் பரப்பில் விரிவான திறந்த மடல் ஒன்று வெளியாகியுள்ளது.

காணொளி ஒன்றில் உரையாற்றிய கம்பவாரிதி ஜெயராஜ், “தமிழினம் உருப்பட வேண்டுமானால் இரண்டு விடயங்களை மறக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலப் போராட்டங்கள்

முதலாவதாக, கடந்த காலப் போராட்டங்களை மக்கள் மறக்க வேண்டும் என்றும், அதைச் சொல்லிச் சொல்லியே சிலர் மக்களைக் கொதிநிலையில் வைத்துத் தங்கள் வாழ்வை நடத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டாவதாக, புலம்பெயர்ந்த நாட்டு மக்களின் செல்வம் தாயகத்திற்கு வருவது எப்போது நிற்கிறதோ, அன்றைக்குத்தான் தமிழ் இனம் உருப்படும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்தக் கருத்து குறித்து வெளியாகியுள்ள திறந்த மடலில்,

“தலைமுறை தலைமுறையாக அ ழிக் கப்பட்டு, எஞ்சியிருந்த மக்கள் தற்காப்புக்காகத் திரும்பியடித்த வரலாற்றை எப்படி மறக்கச் சொல்ல முடியும்?

ஓர் இனம் தனக்கு இழைக்கப்பட்ட அநீ திகளை நினைவில் வைத்திருப்பதில் என்ன குற்றம் கண்டீர்கள்? தமிழினம் எவ்வளவு மோசமாக அழிக்கப்பட்டாலும் அதனை நல்லிணக்கத்தின் பெயரால் மறந்துவிட வேண்டும் என்பதுதானே இலங்கை அரசின் நிலைப்பாடு.

அதையேதானே இன்று கம்பவாரிதியும் பேசுகிறார்?” என்ற காரசாரமான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மணித்துளியிலும் தமிழர்கள் கொ ல் லப் பட் ட நினைவுகள் தாயகத்தில் நிறைந்துள்ள சூழலில், மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் போன்ற நினைவேந்தல்களை நடத்துவதற்கே பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

அப்படியான அச்சுறுத்தலான காலங்களில் நாவாரப் பேசாத பேச்சாளர்கள், இப்போது எந்த தகுதியின் அடிப்படையில் புத்திமதி சொல்ல வருகிறார்கள் என்றும் அந்த மடலில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வு

தற்போது தமிழ் சமூகத்திற்குள் ‘புலமையாளர்கள்’ என்ற வேடத்துடன் புதியதொரு கருத்தியல் கலாசாரம் உருவாகி வருவதாக அந்த மடல் எச்சரிக்கிறது.

சொந்த இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு வாய்திறக்காமல், கடந்த காலப் போராட்டமே தவறு என நச்சுத் தத்துவங்களை விதைக்கும் தரப்பினரின் இன்னொரு முகமாகவே கம்பவாரிதி ஜெயராஜ் வெளிப்பட்டிருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வுகளில் ஒன்றான ‘யாழ்ப்பாண இடப்பெயர்வு’ போன்ற தாயகத் துயரங்களைச் சந்ததி கடத்த விரும்பாத சில தரப்பினர், அதேநாட்களில் மாற்று அரசியல் ஆய்வுகளை நடத்துவதையும் மடல் சுட்டிக்காட்டியுள்ளது.

2009 இல் தமிழர்கள் மாத்திரமன்றி, அவர்களின் பொருளாதார இருப்பும் திட்டமிட்டுக் குலைக்கப்பட்டது.

கொழும்பு மற்றும் வவுனியா தனவந்தர்கள் கப்பம் கட்டியே மாண்ட வரலாறும், வெள்ளை வான் கடத்தல்களும் இதற்குச் சான்று.

தற்போதும் மட்டக்களப்பில் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரமான மாடுகள் சுட்டும் வெட்டியும் கொல்லப்படுவதற்கு எதிராக பண்ணையாளர்கள் 3 வருடங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

மேடைகளில் பசுக்களைப் போற்றி முழங்கும் பேச்சாளர்கள், இவற்றுக்கு எதிராக எப்போதாவது பேசியிருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

இத்தனை பொருளாதாரக் குற்றங்களையும் தாண்டி, போர் முடிந்து இத்தனை ஆண்டுகளில் ஈழத்தமிழினம் ஓரளவுக்கேனும் நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்குப் புலம்பெயர் தமிழர்கள் இரவு பகலாக உழைத்து அனுப்பும் செல்வமே காரணம்.

வடக்கு, கிழக்கு முதல் மலையகம் வரை தமிழ் மக்கள் சிரமப்படும்போது, உலகெங்கிலுமிருந்து ஓடிவந்து உதவும் புலம்பெயர் தளத்தின் இந்த நற்பண்பு, தமிழர்களின் பொருளாதார எழுச்சியை அழிக்க நினைக்கும் பேரினவாத தரப்பினருக்கே தடையாயுள்ளது.

கம்பவாரிதி தனது அறிவுரையின் மூலம் அத்தரப்பிற்கே மறைமுகச் சேவை செய்துள்ளார் என மடல் சுட்டிக்காட்டுகிறது.

“இனிவரும் நாட்களில் தமிழ் சமூகத்திற்கு அறிவுரை சொல்ல முற்படும் முன், இந்த இனம் எதிர்கொண்ட துயரங்களிலோ அல்லது அதற்கெதிரான போராட்டங்களிலோ என்றாவது ஒருநாள் நான் பங்கெடுத்திருக்கிறேனா? என்று உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள்” என்ற நேரடிச் சாடலை அந்த மடல் வெளிப்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *