இலங்கை

முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு எதிரேயுள்ள காட்டுப் பகுதியில் பாரிய இராணுவக் குடியிருப்பு !; பெருமளவில் காடுகள் அழிப்பு

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில், முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு எதிரேயுள்ள அடர்வனப் பகுதியில் இராணுவக் குடியிருப்புகளுக்களை ஏற்படுத்துவதற்காக பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கப்படுத்திய இலங்கை தமிழரசுக் கட்சி வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொதுமக்களுக்கும், மக்களின் அபிவிருத்திக்கும் சட்டங்களை முன்னிறுத்தி தடைகளை ஏற்படுத்தும் வனவளத் திணைக்களம் இராணுவக் குடியிருப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பை எவ்வாறு அனுமதித்து எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை இதுவரை அமைக்கப்பட்ட யானைவேலியின் நீளத்தை வெளிப்படுத்துவதை விட, யானையால் ஏற்படும் உயிரிழப்புகளையும், சேதங்களையும் குறைப்பதே நடவடிக்கையின் வெற்றியை வெளிப்படுத்துமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், காட்டு யானைகளால் ஏற்படும் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்த விரைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதுதொடர்பில்  பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளையின்போதான பிரேரணையில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வனங்களையும் வன விலங்குகளையும் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை வரவேற்புக்குரியது.தகுதியான அலுவலர்கள், நவீன தொழினுட்பங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வழங்குவது அவசியம். அதே வேளை, இவற்றின் பயன்கள் வன்னி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

காட்டு யானைகளின் தாக்குதல்களால் முல்லைத்தீவிலும் மனித உயிர்கள் பறிபோகின்றன. உயிரிழப்புகளுக்கும் சொத்துச் சேதங்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட்டாலும் தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கான இழப்பீடுகளைப் பெறுவதில் முல்லைத்தீவு மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவற்றுக்கு தாமதமற்ற தீர்வு வேண்டும்.

அமைக்கப்பட்ட வேலியின் நீளத்தை விட, குறைக்கப்பட்ட உயிரிழப்புகளும் சேதங்களுமே நடவடிக்கையின் வெற்றியை வெளிப்படுத்தும்.

முல்லைத்தீவு அடங்கலான தமிழர் தேசத்தில் வனவளத்திணைக்களமும் மற்றும் வனசீவராசிகள் திணைக்களமும் அவர்களுக்குரிய கடமைகளை ஆற்றுவதற்கு அப்பாற்பட்டு கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பின் கருவிகளாகவே அரசால் வழிப்படுத்தப்படுகின்றன.யானை மனித மோதலை கட்டுப்படுத்த காட்டு யானைகளுக்கு அவைகளின் வாழிடங்களிலேயே நீர், உணவு கிடைப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

வன்னியில் மட்டும் 457 குளங்கள் புனரமைக்கப்படாதுள்ளன. இவ்வாறான குளங்களைப் புனரமைப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது இவ்விரு திணைக்களங்களுமே.

துணுக்காயில் கழிவு முகாமைத்துவத்திற்கும் கரைதுறைப்பற்றில் மருத்துவமனைக் கழிவுகளை எரியூட்டுவதற்கும் ஒட்டுசுட்டானில் கைத்தொழில் பூங்கா அமைப்பதற்கும் தடைகளை முன்வைக்கும் இத்திணைக்களங்கள், முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு எதிரேயுள்ள அடர்வனப்பகுதியில் இராணுவக் குடியிருப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பை எவ்வாறு அனுமதித்தன?

பொதுமக்களுக்கும் மக்களின் அபிவிருத்திக்கும் 108 சட்டங்களை முன்னிறுத்தும் இத்திணைக்களங்கள் படையினரிடத்தே ஏன் அச்சட்டங்களை முன்னிறுத்தவில்லை.

கூகிள் வரைபடமே காட்டிக்கொடுக்கும் இக்காடழிப்பை, அரசு எவ்வாறு அனுமதித்தது! எல்லோருக்கும் ஒரு சட்டம் என்றால், உங்கள் ஆட்சியிலும் படையினர் விதிவிலக்கா – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *