உலகம்

ட்ரம்புக்கு திண்டாட்டம்: ஈரானில் கொண்டாட்டம்

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை ஈரான் அரசாங்கம் வரவேற்றுள்ளதுடன், அமெரிக்க மக்கள் போருக்கு எதிராகத் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக ஈரான் தொடர்ந்து உயர் பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மனச்சாட்சியின் அடிப்படையிலோ அல்லது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் தாக்கத்தினாலோ அமெரிக்க மக்கள் போருக்கு எதிராகத் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தச் செய்தியை நாங்களும் வரவேற்கிறோம்” என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் அந்நாட்டின் பிரதான பேச்சுவார்த்தையாளருமான மொஹமட் பாகர் காலிபாப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதன் மூலம் அமெரிக்க மக்கள் கருத்தை வொஷிங்டன் புறக்கணிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும் எழுத்து மூலமான அறிக்கையொன்றில், அமெரிக்காவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஈரான் மீதான விரோதப் போக்கு தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிரான அதிருப்தி

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் நிலவிய பகுதிகளிலும் ஜனநாயகக் கட்சி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. பொருளாதாரத்தை ட்ரம்ப் கையாண்ட விதம் மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கச் செய்த போரில் ஈடுபட அவர் எடுத்த தீர்மானம் ஆகியவற்றின் மீதான மக்களின் அதிருப்தியே இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதற்கிடையில், ஈரானின் நீதித்துறையால் நடத்தப்படும் செய்தி நிறுவனம் ஒன்று, எக்ஸ் தளத்தில் பரவிய நகைச்சுவைப் பதிவொன்றையும் பகிர்ந்துள்ளது.

“ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால், டெக்சாஸில் அதனைச் சாதித்துவிட்டார்” என்பதே அந்த நகைச்சுவைப் பதிவாகும். பல தசாப்தங்களுக்குப் பின்னர் டெக்சாஸ் மாநில செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டியே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனநாயகக் கட்சியின் வெற்றியை ஈரான் தலைவர்கள் வரவேற்றுள்ள போதிலும், தேர்தல் பின்னடைவுக்குப் பதிலடியாக ட்ரம்ப் இராணுவத் தாக்குதலை முன்னெடுக்கக்கூடும் எனத் தெஹ்ரான் கவலை கொண்டுள்ளதாக ஈரானின் இரண்டு மூத்த அதிகாரிகள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஈரான் தொடர்ந்து உயர் பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் – அமெரிக்கா நீண்டகாலப் பகைமை

அமெரிக்காவை ஈரான் தலைவர்கள் நீண்டகாலமாகத் தமது பிரதான எதிரியாகக் கருதி வருகின்றனர். அமெரிக்காவை “மாபெரும் சாத்தான்” என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியின்போது தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மாணவர்களால் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் வகையில், புதன்கிழமை ஈரானில் அரச ஏற்பாட்டில் பேரணியொன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டவர்கள், பல மாதங்களாக அமெரிக்கத் தாக்குதல்களை எதிர்கொண்டு ஈரான் தாக்குப்பிடித்துள்ள நிலையில், அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தமது நாட்டின் வெற்றியைப் பிரதிபலிப்பதாகக் கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

“போர்வெறி கொண்ட குடியரசுக் கட்சியினரின் பலம் முறியடிக்கப்பட்டுள்ளது. மனித வரலாற்றில் இதற்கு முன்னர் நிகழ்ந்திராத இந்த மாற்றத்தின் மூலம், இனிவரும் காலங்களில் அமெரிக்க செனட் சபையிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலும் உண்மையான மோதல் இடம்பெறுவதை நாம் காணப்போகிறோம்” என நஸாரி என்ற குடும்பப் பெயரை மட்டுமே தெரிவித்த ஒருவர் பேரணியில் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *