இலங்கை

13 ஆவது திருத்தத்தை எதிர்த்த ஜே.வி.பி. இன்று அதிகாரப்பகிர்வைத் தவிர்க்கிறது – மனோ கணேசன்

மேட்டுக்குடி அரசியல்வாதிகள் மட்டுமே இன, மத, மொழி முரண்பாடுகளைத் தோற்றுவித்தார்கள் என்பது அரைகுறை உண்மையே தவிர, முழுமையான வரலாற்று உண்மையல்ல. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை மக்களின் தனித்துவம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பம் முதலே தெளிவற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்து நாட்டைத் தீக்கிரையாக்கிய கட்சியே இன்று மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தாமல் அதிகாரப் பகிர்வைத் தவிர்த்து வருகின்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் மாநாட்டில் நடைபெற்ற உரை தொடர்பில்  வீரகேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேட்டுக்குடி அரசியல்வாதிகள் தெற்கிலும் வடக்கிலும் இன, மத, மொழி அடிப்படையிலான அரசியல் பாதையைத் தூண்டிவிட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதனை முழுமையான வரலாற்று உண்மையாகச் சித்திரித்து இலங்கைத் தொழிலாளர் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பழைய இடதுசாரிக் கட்சிகள் முதல் இன்றைய தேசிய மக்கள் சக்தி வரையிலான அரசியல் சக்திகளை வரலாற்றுப் பொறுப்பிலிருந்து விடுவிப்பது முறையல்ல.

சண்முகதாசன் தலைமையிலான அரசியல் அணியிலிருந்து வெளியேறி ரோஹண விஜேவீர மக்கள் விடுதலை முன்னணியை ஸ்தாபித்தபோது, அது கிராமப்புற இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட சிங்கள தேசியவாதக் கட்சியாகவே காணப்பட்டது. தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதிலும் நிராகரிப்பதிலும் முரண்பாடான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது.

இன்று வரை தமிழ் பேசும் மக்களைத் தனித்துவமான தேசிய இனங்களாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொண்டுள்ளதா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இல்லை.

தேசிய இனப்பிரச்சினைக்குள் அரச வன்முறை, அரசற்ற வன்முறை மற்றும் பயங்கரவாத வடிவங்கள் தோன்றுவதற்குப் பேரினவாதமே காரணமாகும். அதிகாரத்தைச் சிறுபான்மைத் தேசிய இனங்களுடன் பகிர்ந்துகொள்ளப் பெரும்பான்மை அரசியல் சக்திகள் மறுத்து வந்தமையே கொடூரமான யுத்தத்துக்கு வழிவகுத்தது.

அதிகாரப் பகிர்வுக்கான முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அதற்கான சட்ட அங்கீகாரமாகும். அதனை எதிர்த்து நாட்டைத் தீக்கிரையாக்கிய மக்கள் விடுதலை முன்னணியே இன்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் அதனைத் தவிர்த்து வருகின்றது.

மலையகத் தமிழர்கள் இலங்கையர்கள் அல்லர், இந்திய ஏகாதிபத்தியத்தின் முகவர்கள், அவர்களுக்குக் காணி உரிமை கிடையாது, பெருந்தோட்டங்கள் அமைந்துள்ள முன்னாள் காடுகள் சிங்களத் தேசிய இனத்துக்குச் சொந்தமானவை என்ற கருத்துகளையும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டிருந்தது. மலையகத் தமிழ் மக்களுக்கு எதிராகச் சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்த அக்கட்சியின் செயற்பாடுகளை மறந்துவிட முடியாது.

முஸ்லிம்களை இலங்கையின் தனித்துவமான தேசிய இனமாக மக்கள் விடுதலை முன்னணி கருதுகின்றதா என்பதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தேசிய இனங்களின் தனித்துவங்களை அங்கீகரிக்காமல் ‘இலங்கையர்’ என்ற பொதுவான அடையாளத்தை மட்டும் முன்னிறுத்துவது இனப்பிரச்சினைக்கான தீர்வாகாது. இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து மக்கள் விடுதலை முன்னணிக்கு வரலாற்று விடுதலை வழங்குவது முறையல்ல என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *