இலங்கை

இலங்கைக்கு 10 மில்லியன் யூரோ வழங்கும் EU – பின்னணி என்ன?

இலங்கையின் நிலைபேறான வர்த்தக மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், 10 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பசுமைப் பொருளாதார மாற்றம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இதன் மூலம் இலங்கையின் வர்த்தகத் துறை சார்ந்த நிறுவனங்களின் இயலளவை மேம்படுத்துதல், சர்வதேச வர்த்தகத் தரநியமங்களுக்கு இணங்கிச் செயற்படுவதை ஊக்குவித்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியச் சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன.

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நான்கு ஆண்டுகளுக்கு இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *