இலங்கை

தமிழர் உரிமைகளுக்காக இராஜதந்திர நடவடிக்கை!

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல விடயங்களை இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்ததாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லிக்கு விஜயம் செய்து, அங்குள்ள பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். தமிழின அழிப்பு மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற இன சுத்திகரிப்பு தொடர்பில் டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒப்பீட்டு ஆய்வு மாநாட்டில் பிரதான பேச்சாளராகப் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

என்னுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவுஸ்திரேலியத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தமிழ் செயற்குழு அமைப்பின் செயலாளர் லவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு இளைஞரணித் தலைவர் சூர்யா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் டாக்டர் வெங்கடேசன் ஆகியோரைச் சந்தித்தோம்.

அத்தோடு பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களையும் சந்தித்தோம்.

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளபோதிலும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. அரசியல் தீர்வு முயற்சிகளில் காணப்படும் இழுத்தடிப்புகள், காணிப் பிரச்சினைகள், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அவர்களிடம் எடுத்துரைத்தோம்.

அதேபோல், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுகின்றது என்ற போர்வையில், அரசாங்கத்தைப் பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் தொடர்பிலும் நாம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம்.

மேலும், தொல்பொருள் ஆய்வு என்ற பெயரிலேயே ஆலயங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாகத் திருகோணமலை சிவன் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகளால் ஆன்மீகத் தன்மை பாதிக்கப்படுவதோடு, சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி பௌத்த விகாரைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் புதிய அரசு அமையப்பெற்றுள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இரண்டு ஆண்டுகளாக எந்தவித முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடான மாகாண சபை தேர்தல்கூட நிச்சயமற்ற நிலையில் இருக்கின்றது எனத் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் விடயங்களை மிகவும் விரிவாக எடுத்துரைத்தோம். இதனை இந்திய நிதியமைச்சர் உன்னிப்பாகக் கேட்டறிந்து கொண்டார்.

இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்குத் தமது கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும், ஆலயங்கள் விவகாரம் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ளதாகவும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் இந்திய நிதியமைச்சர் உறுதியளித்தார்.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவின் ஈடுபாட்டை நாம் கோரியிருந்தோம். அதேபோல், இந்தியாவின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கட்டுமானங்களை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தோம். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் இன்னும் அனுமதியின்றி நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பத்தையும் அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.

இராஜதந்திர ரீதியில் தமிழ் மக்களுக்கு நெருக்கடிகள் ஏற்படாத வண்ணம் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் என்று இந்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

புதிய அரசு பல விடயங்களை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்திருந்தாலும்கூட, வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள், பொருளாதார நடவடிக்கைகள், மாகாண சபை தேர்தல் மற்றும் அரசியல் தீர்வு போன்ற பல விடயங்கள் செய்யப்படாமல் இருப்பது குறித்து இந்திய உதவிகளின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தோம்.

இதேவேளை, இந்தியாவில் வசித்து வரும் இலங்கை அகதிகள் தொடர்பிலும் எடுத்துரைத்தோம். அவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப விரும்பினால் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், இலங்கை திரும்ப விரும்பாத அகதிகளுக்கு இந்திய நிரந்தரக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அத்துடன், இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடினோம் என அவர் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *