பலதும் பத்தும்

உறவினர்கள் இல்லாததால் இணையத்தில் அழைப்பு விடுத்த இளைஞர்; திருமணத்தில் குவிந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்

சீனாவில் உறவினர்கள் யாரும் இல்லாததால் தனது திருமணத்திற்கு விருந்தினர்கள் வரமாட்டார்கள் எனக் கவலைப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, இணையவாசிகள் வழங்கிய எதிர்பாராத ஆதரவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த 24 வயதுடைய ஸு செங்ஹாங் (Xu Chenghong) என்ற இளைஞரே இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் நாயகனாவார்.

இவர் சிறுவனாக இருந்தபோதே தனது தந்தையை இழந்துள்ளார். பின்னர் அவரது தாயார் மறுமணம் செய்துகொண்டதால், அவரும் அவரது மூத்த சகோதரரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளனர்.

 

உறவினர்கள் இல்லாததால் இணையத்தில் அழைப்பு விடுத்த இளைஞர் ; திருமணத்தில் குவிந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் | Over 10 000 People Turn Up For His Wedding

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கடுமையாக உழைத்துவந்த ஸு செங்ஹாங், தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்காகப் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமித்துள்ளார்.

எனினும், தனது திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துவதற்கு உறவினர்கள் யாரும் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியுள்ளது.

இதனால், தனது திருமணத்திற்கு இணையவாசிகளை அழைக்க அவர் முடிவெடுத்துள்ளார். இதற்கமைய, சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு, தனது நிலைமையை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

அந்தக் காணொளியில், தான் கடுமையாக உழைத்து விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான பணத்தைச் சேமித்துள்ளதாகவும், ஆனால் திருமணத்திற்கு வருகைதந்து வாழ்த்துவதற்கு உறவினர்கள் அதிகம் இல்லாததால் இணையவாசிகளை அன்புடன் அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்பைக் கண்ட இணையவாசிகள் பலரும் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். இதன் விளைவாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருமணத்தில் நேரடியாகக் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் வெறுமனே விருந்தினர்களாக மட்டும் இருக்காமல், தங்களால் இயன்ற பல்வேறு உதவிகளையும் செய்துள்ளனர்.

சிலர் திருமண அலங்காரப் பணிகளுக்கு உதவியதுடன், வேறு சிலர் பரிசுப் பொருட்களையும் சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

மேலும், பல சமையல் கலைஞர்கள் தாமாக முன்வந்து திருமண விருந்துக்கான உணவுகளை இலவசமாகச் சமைத்துக் கொடுத்துள்ளனர். அத்துடன், திருமண ஊர்வலத்திற்குத் தேவையான சொகுசு வாகனங்களையும் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவர், மணமக்களின் பயணத்திற்காகத் தனது ‘மேபாக்’ (Maybach) சொகுசு காரையே வழங்கியுள்ளார். மேலும், திருமண மெழுகுவர்த்திகள் மற்றும் அலங்காரப் பொருட்களைக் கொண்டு வந்து திருமண இல்லத்தையே விழாக்கோலமாக மாற்றியுள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான தகவல்களை ‘u/Sapphire-Crystal’ என்ற ரெடிட் பயனர் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவு 3,000-க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தனக்கு உறவினர்கள் இல்லை என்ற கவலையில் இணையவாசிகளுக்கு அழைப்பு விடுத்த இளைஞருக்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து குடும்பமாகவும் நண்பர்களாகவும் துணைநின்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் நெகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *