உலகம்

மோடி அரசுக்கு முதன் முறையாக அக்கினிப் பரீட்சை

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இந்தப் பேரணி இடம்பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) சாதகமாக அமையும் எனப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்தப் போராட்டங்களும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்து வரும் ஆதரவும், 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் மோடி அரசாங்கம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய அரசியல் நெருக்கடியாகக் கருதப்படுகின்றன. எனினும், அரசாங்கம் தொடர்ந்து ஸ்திரமாகச் செயற்பட்டு வருவதுடன், அடுத்த பொதுத் தேர்தல் 2029ஆம் ஆண்டிலேயே நடைபெறவுள்ளது.

போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், போக்குவரத்துத் திசைமாற்றங்கள் குறித்தும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

மத்திய டெல்லியிலிருந்து போராட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த பேரணி மைதானம் நோக்கிப் போராட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அதற்கு முன்னரே ஆயிரக்கணக்கானோர் ராம்லீலா மைதானத்தில் திரண்டிருந்தனர்.

நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் பலர் தடிகள் மற்றும் பாதுகாப்புக் கேடயங்களை ஏந்தியிருந்தனர். கலவரக் கட்டுப்பாட்டு வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.

தேசியக் கொடிகள் மற்றும் கட்சிக் கொடிகளை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கானோர் மைதானத்தை நோக்கி நகர்ந்தனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் திறந்தவெளி வாகனமொன்றில் பேரணிக்குத் தலைமை தாங்கினர்.

போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

அவரைப் பதவியிலிருந்து நீக்குவது நாட்டை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுசெல்வதற்கான முதல் நடவடிக்கையாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

“வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்கும் நடவடிக்கையானது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் குரலையும் திருடுவதற்குச் சமமானது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்து வெளிப்படுத்துவதற்குள்ள உரிமையும் பறிக்கப்படுகிறது. இது நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம். இது தேசத்துரோகச் செயலாகும்” என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியைச் சேர்ந்த ரீனா மஹ்தோ கருத்துத் தெரிவிக்கையில், தமது குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அவர்கள் வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டதாகத் தவறான தகவல் பதிவுசெய்யப்பட்டதன் காரணமாகவே பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *