உலகம்

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் பட்சத்தில், பனிப்பாறைகள், கடல் பனி மற்றும் பூமியின் உறைந்த பகுதிகளில் “மீள முடியாத” விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்ட இரண்டு அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில், உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸிற்கும் கணிசமாகக் குறைவாகக் கட்டுப்படுத்தவும், அதை 1.5 டிகிரி செல்சியஸிற்குள் வைத்திருக்க முயற்சி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க பாரிஸ் ஒப்பந்தத்தை இவ் அறிக்கை நினைவூட்டியுள்ளது.

வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கைத் தாண்டும்போது பூமியின் அனைத்து வகையான பனி அமைப்புகளையும் உள்ளடக்கிய ‘கிரையோஸ்பியர்’ (cryosphere) பகுதியில், மிகப்பெரிய அளவிலான மற்றும் பல சந்தர்ப்பங்களில் மீள முடியாத பாதிப்புகள் ஏற்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பனிப்பாறைகள் மற்றும் கடல் பனி உருகுதல், உறைபனி நிலங்கள் (permafrost) உருகத் தொடங்குதல் மற்றும் கடல் மட்டம் வேகமாக உயருதல் போன்றவை, வெள்ளப்பெருக்கு முதல் குடிநீர் பற்றாக்குறை வரை பரவலான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை உயர்வின் சில பாதிப்புகள் ஏற்கனவே கண்கூடாகத் தெரிகின்றன என்றும், அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *