இலங்கை

இனவாதிகள் சிறைசெல்ல தயாராகவும்!; சமூகவலைத்தளங்களில் இனவாத சண்டைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

சமூக ஊடகங்கள் ஊடாக இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்களைப் பரப்பி, சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்போருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பொறுப்பற்ற மற்றும் சமூக அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக புதிய சட்டத் திருத்தங்கள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், தற்போதுள்ள சட்டங்களின் ஊடாகவும் இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டுவோருக்கு எதிராக எவ்வித தயக்கமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை எனக் குறிப்பிட்ட அமைச்சர், இத்தகைய அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் முறைமை மற்றும் சட்டத் திருத்தங்கள் தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படுவதால் தேர்தல் தாமதமடைந்துள்ளதாகவும், குறித்த பணிகள் நிறைவடைந்ததும் தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு சர்வதேச சூழ்நிலைகளும் தாக்கம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் பொறுப்புடன் பொருளாதாரத்தை நிர்வகித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *