பலதும் பத்தும்

பக்கவாதத்தால் 4,000 பேர் உயிரிழப்பு ; நரம்பியல் நிபுணர் எச்சரிக்கை

பக்கவாதம் (Stroke) காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 60,000 நோயாளர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதுடன், அவர்களுள் சுமார் 4,000 பேர் உயிரிழப்பதாக இலங்கை பக்கவாதச் சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் காமினி பத்திரண தெரிவித்துள்ளார்.

இது சமுதாயத்தில் உள்ள குடிமக்களில் கிட்டத்தட்ட 25 சதவீதமான தொகையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூளைக்கான குருதி விநியோகம் தடைப்படும்போதே இந்நோய் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், தற்போதைய தரவுகளின்படி, நாட்டின் முதியோர் சனத்தொகையில் 1,000 பேரில் 10 பேர் இந்நோயால் பாதிக்கப்படுவதாகவும், கொழும்பு மாவட்டத்தில் இது 1,000 முதியோரில் 16 பேராகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

“வாய் ஒரு பக்கமாகச் கோணுதல், ஒரு கையை உயர்த்த முடியாமல் போதல், பேச்சில் மாற்றம் ஏற்படுதல், உடலின் சமநிலை இழக்கப்படுதல் மற்றும் பார்வையில் மாற்றம் ஏற்படுதல் என்பன இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்,” என மருத்துவர் காமினி பத்திரண விவரித்தார்.

உலக அளவில் நோயாளர்களின் உயிரிழப்பைக் கருத்திற் கொள்ளும்போது, பெரும்பாலான நாடுகளில் இந்நோயானது 2-ஆவது, 3-ஆவது அல்லது 4-ஆவது இட காரணியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், கட்டுப்பாடற்ற உயர் குருதி அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, கட்டுப்பாடற்ற கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, புகையிலைப் பயன்பாடு, உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வின்மை ஆகிய காரணிகளே இந்நோய் ஏற்படுவதற்கான 90 சதவீதக் காரணங்களாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுவதன் மூலம் இதிலிருந்து தடுத்துக் கொள்ள முடியும் என்றும், நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் நரம்பியல் நிபுணர் காமினி பத்திரண பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *