பலதும் பத்தும்

தினமும் 50 முறை குதித்தால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் எளிதாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளில் ஒன்று குதிக்கும் பயிற்சி. இதில், ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ எனப்படும் பயிற்சி இதயத் துடிப்பை அதிகரித்து, உடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் 50 முறை இந்தப் பயிற்சியைச் செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பார்க்கலாம்.

குதிக்கும் பயிற்சியின்போது கால்கள், தொடைகள் உள்ளிட்ட தசைகள் செயல்படுகின்றன. இது தசைகளின் வலிமையையும் உடல் சமநிலையையும் மேம்படுத்த உதவும். எலும்புகளை வலுப்படுத்தும் பயிற்சிகளுடன் இணைத்துச் செய்வது எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவலாம்.

இந்தப் பயிற்சியின்போது இதயத் துடிப்பு அதிகரிப்பதால் இரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவலாம்.

குதிக்கும் பயிற்சி போன்ற உடல் இயக்கங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகின்றன. உடற்பயிற்சியின்போது எண்டோர்பின் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் சுரப்பதால் மன அழுத்தம் குறைந்து, மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கலாம்.

தினமும் 50 முறை குதிப்பது கலோரிகளைச் செலவிட உதவும்.

சமச்சீரான உணவுடன் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கவும் உதவும்.

இந்தப் பயிற்சியைச் செய்ய முதலில் நேராக நிற்க வேண்டும். பின்னர் கால்களை அகலமாக விரித்துக் குதிக்கும்போது இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்த வேண்டும். அடுத்ததாக மீண்டும் குதித்துக் கால்களை ஒன்றாகச் சேர்த்து, கைகளை உடலின் பக்கவாட்டில் கொண்டு வர வேண்டும். இதுவே ஒரு ஜம்பிங் ஜாக்ஸ் இயக்கமாகும்.

தொடக்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் பயிற்சி செய்து, உடலுக்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்கலாம். குதிக்கும்போது முழங்கால்களைச் சற்று மடக்கி மென்மையாகத் தரையிறங்க வேண்டும். மூட்டு வலி அல்லது இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள் வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று பயிற்சி செய்வது நல்லது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *