உலகம்

10 மாதங்களுக்கு பின்னர் வெனிசூலா திரும்பினார் மச்சாடோ!

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் நாட்டில் நிலவிய அச்சுறுத்தல், அநியாய கைது அச்சம் காரணமாக சுமார் 10 மாதங்களுக்கும் மேலான நாடு கடந்த வாழ்க்கைக்குப் பிறகு வெனிசூலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியான மரியா கொரினா மச்சாடோ, மீண்டும் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.

நாடு திரும்புவதற்குப் பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் வெனிசூலா மண்ணை அடைந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அமைதிக்கான நோபல்  பரிசைப் பெறுவதற்காக நோர்வே சென்ற மச்சாடோ, அதன்பின்னர் நாடு திரும்ப முடியாத நிலை உருவானது.

அந்த காலகட்டத்தில், அமெரிக்காவினால் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், நாட்டிற்குத் திரும்பியுள்ள மச்சாடோ, தலைநகர் காராகஸுக்கு ஆதரவாளர்களின் பேரணியுடன் உற்சாகமாகப் பயணிக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளன.

மச்சாடோவின் வருகையை அவரது அரசியல் கூட்டாளியும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான எட்முண்டோ கோன்சலஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

மச்சாடோவின் இந்த வருகை வெனிசூலாவில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை என்றும், தானும் விரைவில் வெனிசூலா திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெனிசூலாவில் மீண்டும் சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முக்கிய படியாகவே மச்சாடோவின் வருகை பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா முன்னெடுத்த நல்லிணக்கப் பேச்சுவார்த்தைகளின் நேரடி விளைவாகவே மச்சாடோ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான சூழல் உருவானதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

வெனிசூலாவில் ஜனநாயகம் மலர்வதற்கும், நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளே வழிவகுத்துள்ளதாக அவர் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் வௌ்ளை மாளிகைக்கு சென்ற மரியா கொரினா மச்சாடோ தான் பெற்றுக் கொண்ட நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அன்பளிப்பு செய்திருந்தார்.

வெனிசூலாவில் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை அகற்றுவதிலும், தனது பாதுகாப்பான நாடு திரும்புதலுக்கும் அமெரிக்காவும் ட்ரம்ப் நிர்வாகமும் வழங்கிய அரசியல் மற்றும் ராஜதந்திர ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் அதனை கையளித்ததாக கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *