உலகம்

9/11 நிகழ்வைக் குறிப்பிட்டு ட்ரம்ப் பிரசாரம்: குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்அல்-சயீத்

அமெரிக்க செனட் சபைக்கான இடைத்தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் அல்-சயீத்தை, செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுடன் ஒப்பிட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

 

மிச்சிகனின் போர்ட் ஹுரோன் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸுக்கு ஆதரவாகப் பேசிய ட்ரம்ப், அல்-சயீத் வெற்றி பெற்றால் அவர் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் செனட்டராக மாறுவதற்குச் சமம் எனக் குற்றம் சாட்டினார்.

செப்டம்பர் 11 தாக்குதலின் போது கடத்தப்பட்ட ‘யுனைடெட் ஃப்ளைட் 93’ விமானத்தில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய மிச்சிகனைச் சேர்ந்த டொட் பீமரைப் போல, தீவிரவாதப் பின்னணி கொண்ட ஒருவர் கேபிட்டல் கட்டடத்திற்குள் நுழைவதைத் தடுக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தினார்.

அப்துல் அல்-சயீத் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்க செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் செனட்டர் என்ற வரலாற்றைப் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள அல்-சயீத், தனது அமெரிக்கப் பற்றைக் கேள்விக்குள்ளாக்குவது மிகவும் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, அல்-சயீத் மீதான இந்த விமர்சனங்கள் தம் மீது தொடுக்கப்பட்ட அமெரிக்கர் அல்லாதவர் என்ற போலிப் பிரசாரத்தைப் போன்றதே என்றும், இது மிச்சிகன் மக்களிடம் பலிக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

ட்ரம்பின் தீவிரப் பிரசாரத்திற்கு மத்தியிலும், அல்-சயீத் ஒரு பயங்கரவாதி என்ற கருத்தை தான் ஏற்கவில்லை என குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் சபையின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக மிச்சிகன் பார்க்கப்படும் நிலையில், நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *