உலகம்

மக்கா மசூதியில் முத்தம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு – இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

சவுதி அரேபியாவின் புனித நகரமான மக்காவில் உள்ள மசூதி ஒன்றில் “ஒழுக்கக்கேடான செயலில்” ஈடுபட்டதாகக் கூறி, பங்களாதேஷைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் குறித்த முறையான விவரங்கள் ஏதுதுமின்றி ரகசியமாகத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதும், தண்டனை முடிந்த பின்னரே வங்கதேச அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதும் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபிய உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, தூக்கிலிடப்பட்டவர்கள் நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பாசிர் மற்றும் சித்தி அக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மசூதியின் புனிதத் தன்மையை மீறும் வகையில் அவர்கள் செயற்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர், நீதிமன்ற விசாரணை எவ்வாறு நடத்தப்பட்டது மற்றும் அவர்களுக்குச் சட்ட உதவி வழங்கப்பட்டதா போன்ற எந்தவிதமான வெளிப்படையான தகவல்களையும் சவுதி அரசு வெளியிடவில்லை.

சமூக வலைதளங்களில் அவர்கள் மசூதிக்குள் வைத்து ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொண்டதாகப் பரவிய தகவல்களைத் தவிர, அதிகாரப்பூர்வமாக எவ்வித உறுதியான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகே பங்களாதேஷ் தூதரகத்திற்கு இந்நடவடிக்கை குறித்துத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தங்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படாமல் அவசரமாக இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் பணிபுரியும் தங்களது நாட்டுப் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறி அந்நாட்டு மக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

கொல்லப்பட்ட நஸ்ருல் இஸ்லாத்தின் குடும்பத்தினர் தாங்கள் எதிர்கொண்ட பேரிடியைக் கண்டு கதறித் துடிக்கின்றனர். குடும்பத்தின் வறுமையைப் போக்க சவுதி அரேபியாவுக்குச் சென்ற தங்கள் மகன் எந்தத் தவறும் செய்திருக்க மாட்டான் என்றும், நியாயமான விசாரணையின்றி அவர் பலியிடப்பட்டுள்ளார் என்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க புகார் தெரிவிக்கின்றனர். இந்தச் செய்தி தாங்காமல் நஸ்ருலின் வயதான உறவினர் அதிர்ச்சியில் உயிரிழந்த சோகமும் அரங்கேறியுள்ளது.

சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான பங்களாதேஷ் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் சூழலில், இத்தகைய கடுமையான தண்டனைகள் மற்றும் முறையான தூதரகத் தகவல்தொடர்பு இன்மை இரு நாடுகளுக்கிடையேயான உறவில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

தொழிலாளர்களின் பொருளாதாரச் சுமையையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, சவுதி அரசு இதுபோன்ற விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *