திருப்பலியின் போது சிலுவை சரிந்து விழுந்ததில் அருட்தந்தை உயிரிழப்பு

ஈக்குவடோர் நாட்டில் திருப்பலியின் போது, திடீரென பெரிய சிலுவை ஒன்று சரிந்து விழுந்ததில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்குவடோர் நாட்டின் குவாயாகில் (Guayaquil) நகரில் அமைந்துள்ள ‘சதா சகாய மாதா’ (Our Lady of Perpetual Help) தேவாலயத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேவாலயத்தின் பங்குத் தந்தையான பாட்ரிசியோ அல்பிரேடோ சான்செஸ் மோலினாரி (Father Patricio Alfredo Sanchez Molinari), வழிபாடுகளை நடத்தி மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்த போதே, தேவாலயத்தின் பீடத்துக்குப் பின்புறம் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பாரிய சிலுவை திடீரென கழன்று அவர் மீது பலத்த சத்தத்துடன் விழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கூடிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குவாயாகில் பேராயர் கூடம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “எங்கள் பிரியமான தந்தை பாட்ரிசியோ அல்பிரேடோ சான்செஸ் மோலினாரி இறைவனின் இல்லத்துக்குச் சென்றுள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்து அனுதாபம் வெளியிட்டுள்ளது.
![]()