அவுஸ்திரேலியாவில் பிரெஞ்சு பாணியிலான கலவரங்கள் ஏற்படும்: எச்சரித்த பாலீன் ஹான்சன்

பாலீன் ஹான்சன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பெருமளவிலான குடியேற்றம் நிறுத்தப்படாவிட்டால், பிரான்சில் நிகழ்ந்தது போன்ற வன்முறை கலவரங்களை இந்த நாடும் சந்திக்க நேரிடும் என்று பாலீன் ஹான்சன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியேற்றத்தை நிறுத்துங்கள்
தீவிர வலதுசாரி அரசியல் கட்சியான One Nation-ன் தலைவரான பாலீன் ஹான்சன், பிரான்சிலும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் நடைபெற்ற போராட்டங்கள், பெருமளவிலான இடம்பெயர்வின் விளைவு என்றே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக ஊடகப் பதிவு ஒன்றில், புலம்பெயர்ந்தோர் அவுஸ்திரேலிய வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் பதிவு செய்திருந்தார்.
மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தை நிராகரிப்பவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதை அரசாங்கம் நிறுத்தவில்லை என்றால், அவுஸ்திரேலியாவில் இது போன்ற கலவரங்கள் சாதாரணமாகிவிடும் என்று அவர் கூறினார்.
பிரான்ஸ் எரிந்துகொண்டிருப்பதைப் பாருங்கள். பெருமளவிலான குடியேற்றத்தை நிறுத்துங்கள், இல்லையெனில் இதே நிலை அவுஸ்திரேலியாவிற்கும் ஏற்படும் என்றும் ஹான்சன் பதிவு செய்துள்ளார்.
ஐரோப்பாவைப் பிளவுபடுத்திக்கொண்டிருக்கும் பெருமளவிலான புலம்பெயர்வு எனும் தவறை மீண்டும் செய்யுமளவுக்கு அவுஸ்திரேலியாவுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை என்றும் ஒரு சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் அனைத்தும் பெருமளவிலான புலம்பெயர் மக்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹான்சன் தெரிவித்துள்ளார்.

நமது ஜனநாயகம், நமது வாழ்க்கை முறை மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் விழுமியங்களை நிராகரிப்பவர்களை அவுஸ்திரேலியா தொடர்ந்து இறக்குமதி செய்துகொண்டிருந்தால், இத்தகைய கலவரங்கள் ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய நகரங்களிலும் அரங்கேறும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பங்கேற்ற வார இறுதிக் கலவரங்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஒற்றுமைக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
ஐந்து வாரங்களாக
ஞாயிற்றுக்கிழமை இரவு நேரலை தொலைக்காட்சி உரையில், நாட்டைச் சிதைத்து வரும் வன்முறை ஒடுக்கப்படும் என மேக்ரான் உறுதியளித்தார். ஜனாதிபதி மேக்ரான் பேசிக்கொண்டிருக்கும்போதே, மத்திய பாரிஸில் உள்ள குடியரசு சதுக்கத்தில் கலவரக்காரர்கள் காவல்துறையினருடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டிருந்தனர்.

பிரான்ஸ் கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாகப் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது, சனிக்கிழமையன்று நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
விலைவாசி உயர்வு மற்றும் மோசமான பொதுச் சேவைகளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்கு மத்தியில், 2,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![]()