இலங்கை

கண்டியில் தொடங்கி கொழும்புக்குள் நுழைந்த பேரணி; ஞானசாரருக்குப் பொது மன்னிப்பு வழங்கக் கோரி பிக்குகள் முற்றுகை !; கொட்டும் மழையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கண்டியில் இருந்து கடந்த ஐந்து நாட்களாக வந்த பிக்குகளின் பேரணி நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பை வந்தடைந்த பின்னர், பேரணியில் கலந்துகொண்டவர்கள் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் எவரும் முன்வராததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் ஜனாதிபதி செலயகத்திற்கு முன்னால் கொட்டும் மழையிலும் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வீதி மூடப்பட்டது.

இதனால் காலி வீதி மற்றும் கொழும்பு கோட்டையில் உள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பிக்குகள் குழுவொன்றினால் ‘விடுதலைக்கான பாதயாத்திரை’ என்ற தொனிப்பொருளில் கடந்த 10ஆம் திகதி கண்டியில் இருந்து இந்தப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

பாதயாத்திரை நேற்று முன்தினம் கடவத்தை நகரை வந்தடைந்ததை தொடர்ந்து 6வது நாளான நேற்று கடவத்தையிலிருந்து கிரிபத்கொட, பேலியகொட, மாளிகாவத்தை மற்றும் மருதானை ஆகிய பகுதிகள் ஊடாக நேற்று பிற்பகல் 4மணியளவில் ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்தது.

இதனை தொழர்ந்து பிக்குகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சேத் பிரித் பாராயனத்தில் ஈடுபட்டனர். பின்னர் தமது கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகளை சந்திக்க கோரிக்கை விடுத்தனர். இதன்போது பிக்குகளுக்கு செயலகத்திற்குள் செல்ல முடியாதவாறு ஜனாதிபதி செயலகத்தைச் சூழ பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

எனினும் அதிகாரிகள் தங்களை சந்திக்கும் வரையில் இவ்விடத்தில் இருந்து அகல மாட்டோம் என கூறி வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வீதி மூடப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி செயலாளர் வெளியில் வந்து பிக்குகளை சந்தித்து கலந்துரையாடினார். எனினும் அந்த கலந்துரையாடலில் தமக்கு திருப்தியில்லையென கூறி அவர்கள் தொடர்ந்தும் அகன்று செல்லாமல் அங்கேயே நின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *