இலங்கை

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நாங்கள் தயார்;  ஜனாதிபதிக்கு தெரிவிக்கவுள்ளோம்

மாகாண சபைகள் தேர்தல் தொடர்பான சட்டத்திருத்தங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அது தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கோரிக்கை விடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.

இதன்போது ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகள் தேர்தலை பழைய முறையில் நடத்துவதா? அல்லது புதிய முறையில் நடத்துவதா? என்று முதலில் தீர்மானிக்கப்பட வேண்டும். இதனால் எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு இதுவரையில் 5 தடவைகள் கூடியுள்ளது. இந்த விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கிடையாது. பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். இதனால் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாங்கள் எமது யோசனைகளை முன்வைத்துள்ளோம். பழைய முறையில் நடத்தினால் அதற்கு எவ்வாறு 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்குவது என்பது தொடர்பிலும் புதிய முறையில் நடத்தினால் அந்த வீதங்களை எவ்வாறு உள்ளடக்குவது என்பது தொடர்பிலும் நாங்கள் யோசனைகளை முன்வைத்துள்ளோம். இதுவே எங்களால் முடிந்த நடவடிக்கையாகும்.

எவ்வாறாயினும் மாகாண சபைகள் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது. இதனால் இது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சட்டத்திருத்தங்களை துரிதப்படுத்துமாறு நாங்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் ஜனாதிபதியையும் கோரவுள்ளோம். இதன்படி தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டதும் நாங்கள் உடனே தேர்தலை நடத்துவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.தேர்தலுக்கான நிதி தொடர்பிலும் பிரச்சினைகள் கிடையாது. அந்த நிதியும் இருக்கின்றது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *