உலகம்

அவுஸ்திரேலியாவில் 8 வயது சிறுமியின் மரணம் ; மரண விசாரணை அதிகாரி அதிரடித் தீர்ப்பு

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில், அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரின் கவனயீனமான நடவடிக்கையால் 8 வயது சிறுமி அம்ரிதா வர்ஷினி உயிரிழந்ததாகவும், அவரது மரணத்தைத் தடுத்திருக்க முடியும் எனவும் விக்டோரியா மாநில துணைத் தலைமை மரண விசாரணை அதிகாரி பரேசா ஸ்பானோஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி, மோனாஷ் குழந்தைகள் மருத்துவமனையில் இதயத் தசை அழற்சி (Myocarditis) காரணமாக அம்ரிதா வர்ஷினி உயிரிழந்தார்.

முன்னதாக, வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குடல் அழற்சிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அவருக்கு நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாலை 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஈ.சி.ஜி. (ECG) பரிசோதனையில் இதயப் பாதிப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

 

அவுஸ்திரேலியாவில் 8 வயது சிறுமியின் மரணம் ; மரண விசாரணை அதிகாரி அதிரடித் தீர்ப்பு | Death Of 8 Year Old Girl In Australia

இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் பேட்ரிக் டான், சிறுமியின் உடல்நிலையின் தீவிரத்தைச் சரியாகக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணியளவில் கிடைத்த இரத்தப் பரிசோதனை முடிவுகள் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் காட்டிய போதிலும், காலை 5.30 மணி வரை மருத்துவர் சிறுமியைப் பரிசோதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, காலை 7.30 மணியளவில் சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவரை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புதன்கிழமை தீர்ப்பளித்த துணைத் தலைமை மரண விசாரணை அதிகாரி பரேசா ஸ்பானோஸ், அதிகாலை 4 மணியளவில் கிடைத்த ஈ.சி.ஜி. மற்றும் இரத்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர் பேட்ரிக் டான் வழங்கிய பராமரிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் தனது சிகிச்சை நடைமுறைகளிலும் நோயாளிகளைக் கண்காணிக்கும் செயற்பாடுகளிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *