உலகம்

ஈரானுக்கு ஆதரவளித்தால் சீனாவும் ரஷ்யாவும் இழப்புகளைச் சந்திக்கும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கு சீனாவும் ரஷ்யாவும் எந்த வகையிலும் ஆதரவளிக்காது எனத் தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மொஸ்கோவும் பீஜிங்கும் பலவற்றை இழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அந்த நாடுகள் ஈரானுக்கு ஆதரவளித்தாலும், அது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும் எனத் தாம் கருதுவதாகவும், அவ்வாறான ஆதரவு வழங்கப்பட்டால் அமெரிக்கா அதனை விரைவில் அறிந்துகொள்ளும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதத்திலும், ஈரானுடனான போர் இடம்பெற்றபோது சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ஆதரவளிக்காது எனத் தாம் நம்புவதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

அத்துடன், அவை இந்த மோதலில் தலையிட்டால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்தது.

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானிலும், இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் ஈரான் போர் தொடர்பில் நடுநிலையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக ட்ரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

ஈரானுக்கு ஆதரவளித்தால் சீனாவும் ரஷ்யாவும் இழப்புகளைச் சந்திக்கும் ; ட்ரம்ப் எச்சரிக்கை | Iran China And Russia Will Face Losses Trump Warns

எனினும், இரு நாடுகளும் ஈரானுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றன. அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் இறையாண்மையைத் தீவிரமாக மீறும் செயல் என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேவேளை, மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போட்டி உருவாகும் அபாயம் இருப்பதாக ரஷ்யாவும் எச்சரித்துள்ளது.

மேலும், கடந்த மாதம் சீன ஜனாதிபதி வொஷிங்டனுக்கு விஜயம் செய்தபோது, ஈரானுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என ட்ரம்ப் எச்சரித்ததாகவும், அவ்வாறான ஆதரவை வழங்கப்போவதில்லை என சீனா உறுதியளித்ததாகவும் அமெரிக்காவுக்கான சீனத் தூதுவர் தெரிவித்திருந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *