நாமலுக்கு ஏன் பிணை மறுக்கப்பட்டது?

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கிற்காக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை பெயரிடுமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இதனை நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நீதவான் மீண்டும் நிராகரித்ததோடு, அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதனடிப்படையில் தயாரிப்பட்ட குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புரூணை நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள Biz Solutions நிறுவனம் இந்த வழக்கின் 5 ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் பணிப்பாளரான 2 ஆவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க செயற்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்திற் கொண்டு, இலஞ்ச சட்டமூலம் மற்றும் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரே குற்றப்பத்திரிகையாகத் தாக்கல் செய்யவும், வழக்கை விசாரிக்க நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை நியமிக்கப் பிரதம நீதியரசரிடம் கோருமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாமால் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, “விசாரணைகள் நிறைவடைந்துள்ளமை மற்றும் பிரதிவாதியின் பெற்றோரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்குமாறு கோரினார்.
எனினும், விசாரணைகள் நிறைவடைந்துள்ளதை ஒரு விசேட காரணியாகக் கருத முடியாது என்றும், பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான மருத்துவ அறிக்கைகள் எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய பிரதம நீதவான், பிணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
அதேவேளை, பிரதிவாதிக்கு எதிராகத் தாமதமின்றி வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்ட நீதவான், நீதிபதிகள் குழாமை அமைத்து வழக்குத் தாக்கல் செய்யப்படும் வரை, ஏதேனும் விசேட காரணங்கள் உருவானால் மீண்டும் பிணை மனுவைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் தெளிவுபடுத்தினார்.
![]()