இலங்கை

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 3 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி  உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலேயே வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இக்கொலைச் சம்பவங்கள் தொடர்பில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) கைது செய்தனர்.

இந்த 5 மனிதக் கொலைகள் தொடர்பில் பிள்ளையான், மேற்படி இரு தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் உட்பட 4 பேருக்கு எதிராக கடந்த ஜூன் 17 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, பிள்ளையான் காணொளி தொழிநுட்பம் ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், லண்டனில் தலைமறைவாக உள்ள ‘பொலிஸ் பாய்ஸ்’ என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *