விஜய் ஆந்திரா விஜயம்: நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்துக்கு உத்தியோகப்பூர்வப் விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று பிற்பகல் கணவரம் விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அவரை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் நேரில் சென்று உற்சாகமாக வரவேற்றனர்.
ஆந்திர அரசின் சார்பில் பாரம்பரிய செண்டை மேளங்கள் மற்றும் தாரை தப்பட்டைகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த உயர்மட்டப் பயணத்தின் போது தமிழகத்தின் முக்கிய அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இதன்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் நடைபெற்ற இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில், இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் முகாமை மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு கங்கா ஒப்பந்தத்தின் கீழ் சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரைத் தடையின்றி வழங்குவது குறித்தும், கண்டலேறு மற்றும் சோமசீலா அணைகளில் இருந்து கிடைக்கக்கூடிய நீர் இருப்பைக் கொண்டு நீரை விடுவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன் தென்னிந்தியாவின் நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் இரு மாநில முதல்வர்களும் முக்கியக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோரும் உடனிருந்து ஆந்திர முதல்வரைச் சந்தித்துப் பேசினர்.
![]()