ஆப்கானிஸ்தானில் பிபிசி வானொலி ஒலிபரப்புகளை இடைநிறுத்தியது தலிபான் அரசு!

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் நாடு முழுவதிலும் உள்ள எஃப்.எம் வானொலி நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிபிசி (BBC) செய்தி ஒலிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
பிபிசி நிறுவனம் “தொடர்ச்சியான விதிமீறல்களில்” ஈடுபட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்த விதிமீறல்கள் என்னவென்பது குறித்து அவர் மேலதிக விவரங்களை வெளிப்படுத்தவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரண்டு முக்கிய ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து ஒலிபரப்பு செய்து வந்த ஒரே சர்வதேச செய்தி நிறுவனமாக பிபிசி மட்டுமே இருந்து வந்தது.
மில்லியன் கணக்கான ஆப்கானிய மக்கள் துல்லியமான செய்திகளுக்காக பிபிசியை நம்பியிருப்பதாகவும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
எஃப்.எம் ஒலிபரப்பு தடை செய்யப்பட்டாலும், குறுவலை (Shortwave), நடுத்தர அலை (Medium wave) வானொலி, இணையதளம் மற்றும் செயற்கைக்கோள் மூலமாக பாஷ்டோ, தாரி மற்றும் ஆங்கில மொழிகளில் தங்களது சுயாதீனமான செய்திகள் தொடர்ந்து சென்றடையும் என பிபிசி குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் முதியோர் மற்றும் சிறுமிகள் உட்பட 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிபிசியின் கல்வி மற்றும் செய்தி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகின்றனர். குறிப்பாகப் பாடசாலைக் கல்வி தடை செய்யப்பட்டுள்ள சிறுமிகளுக்கு பிபிசியின் கல்விச் சேவைகள் பெரும் உதவியாக இருந்து வந்தன.
2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து நாட்டில் உள்ள ஊடகங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இசை ஒலிபரப்பிற்குத் தடை, திரையில் பெண்களின் பங்களிப்புக் குறைப்பு மற்றும் ஆண்களுடன் இணைந்து பெண்கள் ஒலிபரப்பு செய்யத் தடை போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()