நிசம் என்பதெல்லாம் நிசமல்ல, நிசத்துள் நிசத்தைக் காண்பதே நிசம்…. சோலையூர் குருபரன்


“போலிவாழ்வை விடுத்துமெய் ஞானத் தெளிவோடு வாழுதல் வாழ்வின் வளம்” குருக்குறள் (468)
ஒவ்வொரு மனிதனும் சந்வேதாசமாக, மகிழ்ச்சியாக மனநிறைவோடு வாழ்கின்றானா எனக் கேட்டால் இல்லை என்றே பதில் வரும். காரணமென்ன அவன் அவனாக வாழவில்லை. அவனுக்கேற்ற வாழ்வும் வாழவில்லை. இருப்பதைக் கொண்டு சந்தோசமாக வாழவும் முயற்சிக்கவில்லை. இல்லாத ஒன்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு அமைதியான சந்தோசமான வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறான். சரி, இல்லாத ஒன்றைப்பற்றிக் கவலைப் படுகிறாய் என்றால் அதனை அடைவதற்கு முயற்சி செய்தாயா? அதுவும் இல்லை. அட முயற்சித்துப் பாரேன் நீ எதிர்பார்த்த வாழ்வு உன் காலடியில் கிடக்கும். முயற்சிக்காமல் கனவு காண்பதில் எந்தப் பயனுமில்லை. வாழ்க்கையில் ஏக்கமும் ஏமாற்றமுமே மிஞ்சும். “மனிதன் மனிதன் அவன்தான் மனிதன், வாழும் போது செத்துச் செத்துப் பிழைப்பவன் மனிதனா..” என்ற பாடலடியும் “நிமிர்ந்து நில் துணிந்து செல் தோல்வி கிடையாது தம்பி..” என்ற பாடலடியும் நமது வாழ்க்கையைப் பெறுமதியானதாக மாற்றுவதற்கு உதவுகின்றன. பிறர் வாழ்க்கையை நாம் வாழ்வதும் தப்பு. நமக்குரிய வாழ்க்கையை வாழாமல் விடுவதும் தப்பு என்பதைப் புரிந்து கொண்டு இலட்சியத்தோடு முயற்சி செய்து வாழப் பழகினால் வாய்ப்புக்கள் உனக்காகக் காத்திருக்கும். இல்லையெனில் வாய்ப்புக்களே உனக்குப் பிரச்சினையாகத் தோன்றும். ‘மயற்சி திருவினையாக்கும்’ என்பதைக் கரம் பற்று, உன் முயற்சி ஒருபோதும் உன்னைக் கைவிடாது.
நீ முயற்சி செய்யும் போது பல கரங்கள் உன்னை வீழ்த்த முயற்சி செய்யும். நீ வீழ்ந்தாலும் நீயாகவே எழுந்திருந்து உனது இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் பயணம் செய். உனது எதிர்காலம் ஒளிமயமாகும். முயற்சி செய்யாமல் எதனையும் சாதிக்க முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள். உனது தெளிவான பயணத்தில் போலிகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்காதே. மனதில் தோனறும் சலனம், சஞ்சலம், அவசரம், பயம், பீதி, அவநம்பிக்கை என்பவற்றுக்கு இடம் கொடுத்தாயானால் நிச்சயம் தோல்வியைத் தவிர வெற்றியை அடைய மாட்டாய். உனது நேரான பாதையில் நெஞ்சில் உறுதியும் உரமும் கொண்டு தோல்வியைக் கண்டு துவண்டு விடாது விடாமுயற்சியோடு முன்னேறு, நீ அடைய நினைத்தவை யாவும் உன் காலடியில் வந்து சேரும். நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையோடு கை வைத்து எதனையும் தொடங்கு நீ தொடங்கியது எல்லாமே உன்வசமாகும்.

பெறுமதியான வாழ்க்கையில் போலிகளுக்கும், முடநம்பிக்கைகளுக்கும் இடம் கொடுத்து நம்பிக்கையை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வெண்டும். போலிகளும் மூடநம்பிக்கைகளும் நம்மைப் பாதித்து நமது பெறுமதியான வாழ்க்கையைச் சிதைத்து விடலாம். உண்மை அறிந்து தெளிவுடன் செயற்படுவதே சிறந்த வாழ்க்கையாகும். அந்த வாழ்க்கையைப் பின்பற்றி வாழ்வதே நம்பிக்கையான வாழ்க்கையாகும். மரபுகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடு, ஒழுக்கம், விழுமியம், ஆன்மீகம் யாவுமே இவ்வுலகில் மனு வாழ முன்னோரால் உருவாக்கப்பட்டவைகள் ஆகும். நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டவை பலவற்றை அதிபுத்திசாலிகள் எனத் தம்மை நினைத்துக் கொண்ட மேதாவிகள் அவற்றைத் தமது குலம், கோத்திரம், சாதி, மதம், மரபு, சம்பிரதாயங்களுக்காகத் தமன்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தமது குலம், கோத்திரம், சாதி சம்பிரதாயங்களை முதன்மைப் படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பிராமணர்கள், தீட்சிதர், நம்பூதிரிகள், அரச சபையில் இருந்த சில மந்திரிமார்கள், தளபதிகளுமாவர். அதிலும் கோயில், பூசை, புன்ஸ்காரம், மேல்சாதி, கீழ்சாதி என்ற பற்போக்குத் தனமான சிந்தனைகளை அரசனுக்குப் போதித்து அவனின் மனதை மாற்றியவர்கள் அப்போது அரசனுக்கு ஆலோசகர்களாக இருந்த புரோகிதர்கள் எனப்படும் பிராமணர்கள் ஆவர். அந்தக் காலத்தில் அதிகம் படித்தவர்களாப் பிராமணர்களே இருந்தார்கள். அவர்கள் வேதங்கள், ஆகமங்கள், சமய சாத்திரங்கள் ஆகியவற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு செயற்பட ஆரம்பித்தார்கள். அதற்கு அரசர்களும் பக்கபலமாக இருந்தார்கள்.
பொ.ஆ.பி 3 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய இருக்கு வேதத்தில் புருஷ சூத்மம் என்னும் பகுதியில் பிராமண, சத்திரிய, வைசீக, சூத்திரர் என்ற சாதிப் பகுப்புப் பற்றிக் கூறப்படுகிறது. சங்க காலத்தில் தமிழர்களிடையே சாதிப் பகுப்பு மறை இருந்திருக்கவில்லை. ஆரிய, பிராமணர்கள் அதனைத் திட்டமிட்டே திணித்தனர். சாதிப் பகுப்பு முறை உண்மையில் நல்ல நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றை ஆரியர்களும் அந்தணர்களும்(பிராமணர்) தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பிம்மாவின் சிரசில் இருந்து பிராமணரும், புயத்தில் இருந்து சத்திரியரும், தொடையில் இருந்து வைசீகரும் பாதத்தில் இருந்து சூத்திரரும் தோன்றியதாகக் கூறித் தம்மை உயர்த்திக் கொண்டனர். அதிலும் ஆண்களுக்கே முக்கியத்துவமளித்து பெண்களை அடக்கி, ஒடுக்கி வீட்டுக்குள் வைத்துக் கொண்டனர். இந்நிலை தற்போதும் இந்தியாவில் அக்கிரகாரங்களில் காணப்படுகிறது. அவர்கள் பெண்களை வீட்டுக்குள் அடக்கி வைப்பதற்காக ஊருவாக்கிய மரபுகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் பலவற்றை ஏன், எதற்கு என்றில்லாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகின்றோம். இதனை மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினர் பலரும் விடாப்பிடியாகப் பின்பற்றி வருகின்றனர். இது பற்றி 3, 4, 5, 6வது கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி இருக்கிறேன். நாம் கண்மூடித்தனமாகச் சில மரபுகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதையும், ஆலயங்கள், வீடுகளில் ஐயர்மாரின் கதையை முற்று முழுதாக நம்பி வீண் செலவு செய்வதைத் தவிர்த்துக் கொள்வோம்.
உலகின் இயக்கத்துக்கு ஏற்பவும், பருவகால, காலநிலை மாற்றங்களுக்கு ஏற்பவும், சில நியதிகளுக்கு அமையவும் உலகில் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடந்தேறுகினறன. இந்த மாற்றம் மூலத்தில் இருந்து படைக்கப்பட்ட யாவற்றிலும் இயற்கையாக நிகழும். இந்த மாற்றங்களுக்குக் காரணமாக இறைவனின் ஐந்தொழில்களும், ஐம்பூதங்களும் அதற்குரிய தெய்வங்களும் கிரகங்களும் அமைவதாக சைவாகமங்களும், திருமுறைகளும், சித்தாந்த நாத்திரங்களும் கூறுகின்றன. மூலமாகிய பரப்பிரமம் ஐந்தொழில்கள், கடமைகள், பொறுப்புக்களை கடவுளர்களுக்கும், தெய்வங்களுக்கும், கிரகங்கள் மற்றும் அதிதேவதைகளுக்கும் பிரித்துக் கொடுத்திருப்பதாகவும் அறிகிறோம். அதன் அடிப்படையிலேயே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதாக நம்புகிறோம்.
இந்துக்களில் பெரும்பாலானோர் சகுணங்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இயறகை வழிபாடு இன்றும்கூடப் பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆட்டுச் சடங்கு, குறி சொல்லுதல், கட்டுச் சொல்லுதல், தெய்வங்களைக் கட்டுதல், மீண்டும் உருக் கொடுத்தல், தீ மிதித்தல், அலகு போடுதல், அலுகு போட்டு முள்குத்திக் காவடி எடுத்தல், பறவைக் காவடி எடுத்தல் ஆகியன பெருமளவு பக்தர்களின் பங்களிப்புடன் பக்தியோடு பின்பற்றப்படுகின்றன. கிராமத்து மக்கள் மத்தியில் இந்த சமய நெறிமுறைகள், சம்பிரதாயங்களுக்குப் பெருமளவு வரவேற்பும் உணர்வு பூர்வமான பக்தியும் காணப்படுகின்றன. இவை அவர்களது சமய, சம்பிரதாய நம்பிக்கையோடு கலந்த உணர்வுகளாகவும் காணப்படுகின்றன.

இந்து மதத்தில் காலாகாலமாகப் பின்பற்றி வந்த சில பழக்க வழக்கங்கள் இப்போது சில இல்லாமல் போய் விட்டன. இன்னும் சில மருவிச் சென்று கொண்டிருக்கின்றன. முன்பிருந்த நரபலி எனப்படும் மனிதபலி இல்லாமல் போய்வவிட்டது. மிருகபலி ஓரிரு இடங்களில் மாத்திரம் அரச அனுமதி பெற்று நடைபெறுகின்றது. அதேபோல் உடலை வருத்திச் செய்யும் சில வழிபாட்டு முறைகளும் அருகிச் சென்று கொண்டிருக்கின்றன. முன்பு பின்பற்றிய பல மரபுகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்ககள் குறைந்து கொண்டு செல்கின்றன.
சாத்திரம் பார்த்தல், கெடுதி கேட்டல், குறிபார்த்தல், காண்டம் பார்த்தல், வெற்றிலை வைத்துக் கேட்டல் மைபோட்டுப் பார்த்தல், பில்லி பிடித்துப் பார்த்தல், தூது பார்த்தல் ஆகியன ஒருவரின் விருப்பம், பலவீனம் என்பவற்றோடு தொடர்புபட்டது. சிலர் எதிர்காலப் பலனை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். சிலர் எதிர்காலத்தை அறிந்து கொள்வதனால் வீணான கவலையும், வேதனையுமே உருவாகும் என்பதனால் அதைப்பற்றி அறிந்து கொள்ள விரும்புவதில்லை என்கின்றனர். தினமும் இராசி பலன் பத்திரிகைகளில, வருகின்றன. அதேபோல் வானொலி, தொலைக்காட்சி சேவைகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றிலும் கூறப்படுகின்றன. ஒரு இராசி, நச்சத்திரத்தின்மீது ஒவ்வொரு கிரகங்களும் பார்க்கின்ற பார்வை மாறாதது. கிரகங்கள் (கோள்கள்) ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு மாறும் போதே அதன் பார்வையும் பலன்களும் மாறுபடும். அவ்வாறு இருக்கையில் குறித்த தினத்துக்குரிய பலனை இராசி பலன் கூறுவோர் ஏன் வேறுபட்டு மாற்றி மாற்றிக் கூற வேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சி, வானெலி, சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் வேறுபட்ட பலன்கள் கூறப்படுகின்றன. ஒருவர் குறித்த இராசிக்குக் குறித்த தினத்தில் கெட்ட பலன் கூறுகின்றார். இன்னொருவர் அத்தினத்தை நல்ல நாள் எனக் கூறுகின்றார். இது எப்படி, எவ்வாறு சாத்தியமாகும். அல்லது எழுந்தமானமாகப் பணம் சம்பாதிப்பதற்காகக் கூறுகின்றனரா? இதில் எது உண்மை. எது பொய் எனக் கேட்கத் தூண்டுகிறது. இதற்குள் பல ஏமாற்றுத் தனங்களும், பித்தலாட்டமும், நமது பலவீனமும் மூடநம்பிக்கையும் சேர்ந்துப் பலரைப் பணம் சம்பாதிக்க வைக்கிறது.
முன்பு வாழ்ந்தவர்கள் எல்லாவற்றையும் இயற்கையை மையப்படுத்தியே தீர்மானித்தனர். சகுணம் பார்த்தனர், சூரியன், கிரகங்கள், நச்சத்திரங்கள், பறவைகள், இயற்கைத் தாவரங்கள், முகில்கள், நிலத்தில் தெரியும் நமது நிழல் ஆகியவற்றைக் கொண்டு காலத்தையும், நேரத்தையும், காலநிலையையும் கணிதத்தனர். இயற்கையின் படைப்புக்களைத் தனது உணவாக உட்கொண்டனர். தாவர உணவுகள், மச்சம், மாமிசம் என்பவற்றையும் உணவாக உட்கொண்டனர். அவை அவர்களுடைய வாழ்க்கையாக மாறி இருந்ததன. இப்போது அவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பம் வரை சைவ உணவாக இருந்த மச்சம், மாமிசம் ஆகியன இப்போது சைவ உணவு வகையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பல ஆதாரங்களுடன் பல ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அண்மையில் தேன்நாடு (02-07-2023) மின்னிதழில் இலங்கைநாதன் குகநாதன் என்பவர் வழங்கிய தகவலுடன் எனது ஆதாரங்களையும் சேர்த்து முன்வைக்கின்றேன்.
மீன் சைவ உணவு ஆகுமா? ஆகும் என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளிவந்துள்ளது. சிந்துவெளி அகழ்வாய்வுகளில் இருந்து மச்சம் எனப்படும் புலால் உணவு தமிழர்கள் மத்தியில் சைவ உணவாகக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இந்துக்களின் யாகங்களில் மாட்டிறைச்சி உட்படப் பல மிருக இறைச்சி (மாமிசம்) வகைகளை ஆகுதியாகப் படைத்து வந்ததோடு, அந்தணர்கள் (பிராமணர்கள்) இறைச்சி மீன் ஆகியவற்றைச் சாப்பிட்டும் வந்தனர். யாகங்களில் ஆகுதிகளாகப் பல மிருகங்கள் கொல்லப்பட்டதையும், மிருகங்கள் பலி கொடுக்கப்பட்டதையும் பார்தது வெறுப்புற்று புத்தரும், மாவீரரும் இந்து மதத்தில் இருந்து வெளியேறனர். பின்னர் புத்தர் பௌத்த மதத்தையும், மாவீரர் சமண மதத்தையும் தோற்றுவித்தார்கள்.
இந்த இரு மதங்களும் கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகிய கொள்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்து வந்தன. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இருந்து தமிழ்நாட்டில் சமணர்களின் ஆதிக்கம் பெருகவே அவர்களின் கொள்கையும் பிரபலம் பெற ஆரம்பித்தன. சமணத் துறவிகள் பரிநிர்வாணக் கொள்கையைக் கடைப்பிடித்ததோடு கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியவற்றையும் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தனர். அதனைக் காலப் போக்கில் ஓரு சில அந்தணர்களும் பின்பற்றத் தொடங்கினர்.
சுவாமி விவேகாநந்தர் அமெரிக்கா கலிபோனியாவில் சேக்ஸ்பியர் கிளப்பில் 1900 ஆம் ஆண்டு பெப்ரவரி 02 ஆந் திகதி ஆற்றிய உரையில் “மாட்டிறச்சியைச் சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல” (He is not a good Hindu who does not eat beef) எனக் கூறி இருக்கின்றார். இது அவரது அமெரிக்கப் பிரசங்கத் தொகுதி- 3 இல் வெளிவந்திருக்கிறது. கண்ணப்ப நாயனார் திருக்காளகத்தி நாதருக்கு மாமிசத்தை சாதமாகப் படைத்து முத்தியடைந்திருக்கின்றார்.
அதிபத்த நாயனார் இறைவனுக்குத் தினமும் தானமாக மீனைக் கொடுத்து முத்தியடைந்திருக்கின்றார். திருநாவுக்கரசு நாயனார் ஆறாம் திருமுறை திருத்தாண்டகத்தில் ‘சங்கநிதி பதுமநிதி…’ எனத் தொடங்கும் தேவாரத்தில் ‘அங்கமெல்லாம் குறைந்தழுகித் தொழுநோயராய், ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும், கங்கைவார் சடைக்கரத் தார்க்கன் பராகில், அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” எனவரும் நான்கு வரிகளில் மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் பக்தியினைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் நந்திக்கு முன்னாலுள்ள பலிபீடம் அக்காலத்தில் மிருகங்களைப் பலி கொடுக்கும் இடமாக இருந்ததனாலே அது பலிபீடம் என அழைக்கப்பட்டதாக மறைமலை அடிகள் குறிப்பிடுகின்றார். மேற்கு வங்காளத்தில் உள்ள அந்தணர்கள் (பிராமணர்) மீனைக் கடல் புஸ்பம், நீர்ப் புஸ்பம் எனக் கொண்டு மீனைச் சாப்பிட்டுக் கோயிலுக்குக் கோயிலுக்குச் சென்று செய்கின்றனர். அதேபோல் காசி மற்றும் இமயமலை அடிவாலங்களில் சில பிரதேசங்களில் வாழும் சிவனின் தீவிர பக்தர்களான அகோரிகள் மனித, மாமிச உணவுகளை உண்பதாகவும் கூறப்படுகிறது. மேனாள் பாண்டிச்சேரி ஆளுனர் தமிழிசை 2022 இல் புலாலை இந்துக்களின் சைவ உணவாக அறிவிக்க வேண்டும் எனப் பாண்டிச்சேரி, தமிழ்நாட்டு அரசுகளைக் கேட்டிருக்கின்றார். இந்துக்கள் மச்சம், மாமிச உணவினை மரக்கறி (Vegit) மரக்கறி அல்லாத(Non Vegit) என்றுதான் கூறுகின்றனரே தவிர சைவ உணவு அல்லாதது எனக் கூறவில்லை.

அவ்வாறு இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்களுக்குப் பின்னர் இருந்து இந்து மதத்தில் ஏற்பட்ட புத்தாக்கங்களும் கோயில்களில் மிருகபலி தொடர்பான எதிர்ப்புக்களும் பிற்காலத்தில் மச்சம், மாமிசத்தை ஓதுக்கி வைத்தனரே தவிர அவை சைவ உணவு அல்ல எனக் குறப்படவில்லை. இது தொடல்பாக ஆய்வு செய்து ஒரு புத்தகம் எழுதி நிரூபிக்கலாம். இக்கட்டுரையல் சில முக்கியமான தகவல்களை மட்டும் சுருக்கிக் கூறியிருக்கிறேன். இன்றுங்கூட இந்தியாவின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றைப் பலிகொடுத்து, சமைத்துப் படைத்து உண்டு மகிழ்ந்து செல்வதையும் அறிகிறோம்.
நமது வாழ்க்கையில் பெரும்பாலானவை உண்மை எது, போலி எது என்பது பற்றிக் கண்டு கொள்ளாமலேயே காலத்தைக் கழித்து விடுகிறோம்.
ஒருவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்தால் ஒருவர் செய்வினை என்பார், இன்னொருவர் சாப்பட்டுக்குள் ஏதோ மருந்து போட்டுக் கொடுத்துவிட்டனர் என்பார். மற்றுமொருவர் இது குடல்புண்ணால் ஏற்பட்ட வேதனை வைத்தியரைச் சந்தியுங்கள். அல்லது அதற்குரிய பரிகாரத்தைச் செய்யுங்கள் என்பார். இதற்குரிய தீர்வினை நோயாளிதான் எடுத்தல் வேண்டும். போலியை மறந்து உண்மை அறிந்து சரியான தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காகவே நமக்குள் ஆறாவது பகுத்தறிவு காணப்படுகிறது. இதனையே கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்கின்றனர்.
![]()