சட்டவிரோத சொத்துக்கள், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர்கள் பலர் விரைவில் சிக்குவர்!

சட்டவிரோத சொத்துக்கள் உள்ளிட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் 200க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் அரசியல்வாதிகளாவர்.
இந்நிலையில் மேலும் பலருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் மனைவிமார், அவர்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அடங்குவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டில் கைதாகும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் மேலும் உயர்வடையலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே குறிப்பிட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதவாறு பயணத்தடைகளை விதிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![]()