சிரந்தி திடீரென இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதி

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரைக்கமைய நேற்று திங்கட்கிழமை பிற்பகல் சிரந்தி ராஜபக்ஷ தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடக பேச்சார் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி சிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் 62ஆம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக கடந்த 7ஆம் திகதி அந்த ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சிரந்தி ராஜபக்ஷ இன்று 13ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் மீண்டும் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட நிலையில் திடீரென அங்கிருந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய கொழும்பு கண் வைத்தியசாலையில் விசேட கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
கடந்த 7ஆம் திகதி சிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, அவருக்கான சில சிகிச்சைகளுக்காக அவரை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு அழைத்துச் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த போதும் அவர் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படாமை ஊடாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாக சிரந்தி ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இன்றைய தினம் நீதிமன்றத்தில் சிராந்தியின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு கூறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
![]()