இலங்கை

கறுப்பு ஜூலைக் கலவர இழப்புகளுக்கு மன்னிப்புக்கோரல் மட்டுமா…!; சுமந்திரன் கேள்வி

தமிழர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை இனவன்முறை தொடர்பான செயல்முறை வெறும் மன்னிப்பு கோருதலோடு நின்றுவிடக் கூடாது, பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்கான ஒரு பொறிமுறை இருக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

1983 ஜூலை மாதம் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இன வன்முறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்புக் கோரியமை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

அவர் மேலும் தெரிவிக்கையில், இது ஒரு வரவேற்கத்தக்க நகர்வு. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 2001ஆம் ஆண்டில் இந்த வன்முறைகள் குறித்து விசாரிக்க ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.

2004ஆம் ஆண்டில் இலங்கை அரசின் சார்பில் அவர் மன்னிப்பு கோரியிருந்தார். பலர் இதை மறந்துவிட்டார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, அதன் பல பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்தச் செயல்முறை வெறும் மன்னிப்பு கோருதலோடு நின்றுவிடக் கூடாது. பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்கான ஒரு பொறிமுறை இருக்க வேண்டும். பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட்டு, பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட்டால் அதை நாங்கள் வரவேற்போம்.

ராஜபக்‌ச குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகள்

 

அதேவேளை, ராஜபக்‌ச குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை.

இது ஊழல் தொடர்பான விவகாரம் என்பதால், முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைகளை நாங்கள் வரவேற்கிறோம், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *