இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; 9 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாகா இனத்தவர்கள் 6 பேர் மற்றும் நேபாள வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேரின் உடல்கள் நேற்று அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காங்போக்பி (Kangpokpi) மாவட்டத்தில் உள்ள மாகுய் (Makui) கிராமத்தில் ஆயுதம் ஏந்திய குக்கி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் நாகா லியாங்மை (Naga Liangmai) கிராமக் காவல் படையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஆர். அஜின்பௌ (R Ajinpou) என்பவரது தலையைத் துண்டித்து கிளர்ச்சியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அஜின்பௌவின் துண்டிக்கப்பட்ட தலையை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திரும்ப ஒப்படைக்குமாறு மாகுய் கிராம நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இறந்த நபரின் தலையை எடுத்துச் செல்வது தங்களது கலாசார பாரம்பரியத்துக்கும் மனித கண்ணியத்துக்கும் எதிரான பெரும் அத்துமீறல் என சுட்டிக்காட்டியுள்ள கிராம நிர்வாகம், இறுதிச் சடங்குகளைச் செய்ய உடலின் தலைப் பகுதியைத் திருப்பித் தருமாறு வலியுறுத்தியுள்ளது.

மேலும், இத்தாக்குதலில் பல கட்டடங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதாகவும், கிராமவாசிகளின் கால்நடைகள் வெட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உக்ருல் மாவட்டத்தில் செனாபதி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் ராய் (Sandeep Rai – 30) என்ற நேபாள வம்சாவளி நபர் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் உடற்கூறாய்வுக்குப் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கொலை குறித்து நியாயமான விசாரணை நடத்த மணிப்பூர் கோர்கா நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, கமஜோங் மாவட்டத்தின் சாசாட் (Chassad) கிராமப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். அத்துடன் அங்குள்ள 23 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறைகளைக் கண்டித்தும், பாதுகாப்பை வலியுறுத்தியும் காங்போக்பி மாவட்டத்தில் ‘பழங்குடியின ஒற்றுமைக் குழு’ (CoTU) அழைப்பு விடுத்த 24 மணி நேர பூரண ஹர்த்தால் காரணமாக இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இதனிடையே, மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் கேம்சந்த் சிங் (Khemchand Singh) உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூரில் பெரும்பான்மை மெய்டி சமூகத்தினருக்கும், மலைப்பகுதியில் வாழும் நாகா மற்றும் குக்கி போன்ற பழங்குடியின மக்களுக்கும் இடையே நிலம், அரசியல் அதிகாரம் மற்றும் பழங்குடியினர் அந்தஸ்து கோருவது தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளே இந்த மோதல்களுக்கு மூல காரணமாகும்.

மேலும், எல்லை தாண்டிய சட்டவிரோதக் குடியேற்றங்கள், போதைப்பொருள் உற்பத்திக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் மற்றும் வளங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டி ஆகியவை இரு தரப்புகளுக்கு இடையிலான இன மோதல்களை மேலும் தீவிரப்படுத்தி, தொடர்ச்சியான வன்முறைகளுக்கு வழிவகுத்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *