உலகம்

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்: இம்ரான் கான் கட்சியின் மாகாண அரசு கலைப்பு

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகக் கூறி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி (Pakistan Tehreek-e-Insaf (PTI) ஆளும் மாகாண அரசாங்கத்தைக் கலைத்து, பாகிஸ்தான் ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

அவசரநிலையின் போது சில அல்லது அனைத்து மாகாண அரசாங்க செயல்பாடுகளையும் மத்திய அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள அரசியலமைப்பு வழிவகை செய்கிறது.

ஆலோசனைக்குழு ஒன்றின் உதவியுடன் மாகாண ஆளுநர் பொறுப்பேற்பார் என்றும், இந்த ஏற்பாடு ஆரம்பத்தில் ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ஆசம் நசீர் தாரார் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்திவேளையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தில் அண்மைக்காலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு ராணுவத்தினர் களமிறக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“நிலைமை மிகவும் மோசமாக உள்ளது; சில மாவட்டங்களில் மாலையானதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைக் கூடப் பார்க்க முடிவதில்லை,” என்று உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக இம்ரான் கானின் கட்சி மீது மத்திய அரசும் ராணுவமும் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இக்கடைசியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இம்ரான் கானின் கட்சி மறுத்துள்ளதுடன், தேவைப்படும் நிதியையும் உபகரணங்களையும் வழங்க மத்திய அரசு தவறிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்குள் தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதாக அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது இஸ்லாமாபாத் குற்றம் சாட்டுகிறது. மேலும் இம்ரான் கானின் கட்சி, காபூலில் உள்ள தலிபான்கள் மற்றும் அவர்களின் உள்ளூர் கூட்டாளிகள் மீது அனுதாபம் கொண்டுள்ளதாகக் கூறுகிறது.

எனினும், ஆப்கானிய தலிபான்கள் மற்றும் இம்ரான் கானின் கட்சி ஆகிய இரண்டு தரப்புமே இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளன.

மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தைத் தொடர்ந்து, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அவசரநிலையை அறிவித்தார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *