இலங்கை

ஷிரந்தியை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ள மொட்டுக்கட்சி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தங்களது கட்சியைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்காக ஷிரந்தி ராஜபக்சவை வெளியேற்றி, அவரை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர் என சமூகச் செயற்பாட்டாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குடிமக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் வெவ்வேறு சட்டங்கள்
இந்த நாட்டில் மக்கள் எதிர்பார்த்த சட்டத்தின் ஆட்சி, சட்டம் அனைவருக்கும் சமமாகச் நடைமுறைப்படுத்தப்படுதல் ஆகிய விடங்கள் படிப்படியாக நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன.

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், சாதாரண குடிமக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் வெவ்வேறு சட்டங்கள் இருக்கக் கூடாது என்று பலரும் கூறினார்கள்.

ஆனால், தங்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு எதிராகச் சட்டத்தின் கரம் நீளத் தொடங்கும்போது, அந்தக் கொள்கையை ஒதுக்கிவிட்டு அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டது தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தான் என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம்.

அதேபோல, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரின் மனைவியும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில்தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாதாரண ஒரு குடிமகனுக்கு எவ்வாறு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ, அதேபோல அதிகாரம் மிக்கவர்களுக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில், நாமல் ராஜபக்ச போன்றவர்கள் அரைக் காற்சட்டை அணிந்து கொண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்க வந்ததை பார்த்தோம்.

விசாரணை அமைப்புக்களை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவர்கள் நடந்து கொண்ட விதத்தை நாம் பார்த்தோம்.

வாக்குமூலம் வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டபோதும் கூட, அந்த அரசியல் அதிகாரம் மிக்கவர்கள் அங்கு செல்லாமல், விசாரணை அதிகாரிகளைத் தங்களது வீடுகளுக்கு வரவழைத்து, அவர்களைச் சங்கடத்திற்கு உள்ளாக்கிய விதத்தை நாம் பார்த்தோம். ஆனால் அந்த நடைமுறை தற்போது மாறிக்கொண்டிருக்கின்றது.

தற்போது சாகர காரியவசம் போன்றவர்கள், ஷிரந்தி ராஜபக்ச எமது கட்சியின் உறுப்பினர் அல்ல என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஷிரந்தி ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தங்களது கட்சியைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்காக ஷிரந்தி ராஜபக்சவை வெளியேற்றி, அவரை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *