இந்தியா

டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் கைதானமைக்கு ஐ.நா கவலை – இந்தியா பதில்!

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர் (SIR) செயல்முறையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி, புதுடெல்லியில் கொக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அகில இந்திய மாணவர் சங்கத்தின் நேஹா போரா உள்ளிட்ட சுமார் 7,000 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும், கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் பின்னர் இரவில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கொக்ரோச் ஜனதா கட்சி நிறுவுனர் அபிஜித் தீப்கே மற்றும் சில நிர்வாகிகள் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்குக் குடிநீர் மறுக்கப்பட்டதாகவும், அவர்கள் பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் கொண்டுபோய் விடப்பட்டதாகவும், பொலிஸார் தன்னிச்சையாக நடந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, டெல்லியில் நடைபெற்ற இந்த கைது நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான முறையில் கூடுவதற்கான உரிமையை இந்திய அதிகாரிகள் முழுமையாக மதிக்க வேண்டும் எனவும், போராட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் அவசியமான மற்றும் விகிதாசார அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஜனநாயக மரபுகள் மற்றும் மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்க, அமைதியான முறையில் போராடுவோரிடம் சட்ட அமுலாக்க முகமைகள் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் கவலைகளைத் தீர்க்க அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐநாவின் இந்த அறிக்கைக்கு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள இந்தியத் தூதரகம் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளது.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், அங்கு அமைதியான முறையில் கூடுவதற்கான உரிமை அரசியலமைப்பின் மூலம் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், வலுவான நிறுவனங்கள், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் இந்த உரிமையைப் பாதுகாப்பதாகவும், ஒவ்வொரு ஜனநாயக நாட்டைப் போலவே இந்தியக் குடிமக்களும் பொது ஒழுங்கைப் பேணுகின்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இந்த உரிமையைப் பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சட்டத்திற்கு இணங்கவே செயல்படுவதாகவும், எத்தகைய முறைப்பாட்டையும் விசாரிப்பதற்கு நாட்டின் நீதிமன்றங்கள் முழுமையாகச் செயற்படுவதாகவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழு பாரபட்சமின்றிச் செயற்பட வேண்டும் எனவும், உலகின் பிற பகுதிகளில் நடைபெறும் பெருமளவிலான போராட்டங்களுக்கும் ஆணைக்குழு இதேபோன்று சமமான கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஐநாவுக்கான இந்தியத் தூதரகம் தனது அறிக்கையில் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *